புண்ணியம் தருமா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்?

முதல்வரின் வெளிநாட்டுப் பயணமும் விமர்சனங்களும்...
சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலின்...
சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலின்...

2030-2031-ம் நிதியாண்டுக்குள், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்படச் செய்வதின் ஒரு பகுதியாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் பயணமாகச் சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தனது பயணத்தின்போது வெளிநாட்டு அமைச்சர்களையும், தொழிலதிபர்களையும் தொடர்ச்சியாக சந்தித்துப் பேசிவரும் முதல்வர், தமிழகத்துக்கான புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக காரியமாற்றி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. அதேசமயம், “இன்பச் சுற்றுலா... போட்டோ ஷூட் பயணம்...” என்றெல்லாம் முதல்வரின் இந்த அரசுமுறை பயணத்தை பகடி செய்கிறது அதிமுக.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு இரண்டாவது முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். கடந்த மார்ச் மாதம் 4 நாள் பயணமாக ஐக்கிய - அரபு நாடுகளுக்குச் சென்றார் முதல்வர். அப்போது அங்குள்ள 5 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.2,600 கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்த சமயத்தில், ரூ.40 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான 6 தொழில் திட்டங்களுக்கும், தூத்துக்குடியில், மலேசியா நாட்டைச் சேர்ந்த பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ரூ.34 ஆயிரம் கோடி செலவில் அமையவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில் உள்ளிட்ட மேலும் சில தொழில்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 9 நாள் பயணமாகச் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் முதல்வர். சிங்கப்பூரில், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறையில் நீண்ட கால கூட்டாண்மையை நிறுவுதல், தமிழ்நாட்டில் தொழிற்சாலை திறன் பள்ளிகளை அமைத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் முன்னிலையில் சிங்கப்பூரில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
முதல்வர் முன்னிலையில் சிங்கப்பூரில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இதேபோல் ஜப்பானிலுள்ள முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருபோரூரில் இந்த நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் உடனுக்குடன் அப்டேட் கொடுக்கப்பட்டாலும், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. “கமிஷன், கலெக் ஷன் கரப்ஷன் செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருக்கிறது. இந்தப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது முதலீடு செய்யவா என்பதும் தெரியவில்லை” எனச் சாடி இருக்கிறார் ஈபிஎஸ்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோ, ’’கப்பலில் வர்த்தகம் செய்தவர்களிடம் வரி கேட்டுவிட்டு, விமானத்தில் வர்த்தகம் செய்பவர்களை வா வா என்று அழைக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு அன்றைக்கு அடிமையாக இருந்த நம் நாடு, இன்று உலக நாடுகளுக்கு அடிமையாக இருக்கத் துடிக்கிறது. இது என்ன விடுதலை... இது என்ன சுதந்திரம்?” எனச் சாடியுள்ளார்.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இந்த விமர்சனங்கள் குறித்து தமிழகத்தின் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான தங்கம் தென்னரசுவிடம் பேசினோம்.

“கடந்த 2 ஆண்டுகால திமுக ஆட்சி, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் ஏராளமான தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. இந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.2.95 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் செய்வதற்காக 226 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இவையெல்லாம் செயலுக்கு வரும்போது 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். எங்களை நீங்கள் தொழில் முதலீட்டுக்காகத் தேடி வரவேண்டும் என்று இல்லாமல், நாங்கள் உங்களைத்தேடி வருகிறோம் என்று கூறுமளவுக்கு முதல்வர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்றன.

அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியைக் காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டிவிட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. அதனால் அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்கள் செயல் நிச்சயம் பேசும்’’ என்றார் அவர்.

ஜப்பானில் முதல்வர்...
ஜப்பானில் முதல்வர்...

திக்கெட்டும் சென்று தமிழகத்துக்கான புதிய தொழில் முதலீடுகளை திரட்டி வரும் முதல்வர், அதே சுறுசுறுப்புடன் அதிகாரிகளையும் அரசு இயந்திரத்தையும் செயல்பட வைத்து, கையெழுத்தான திட்டங்களுக்கு காலதாமதமின்றி செயல்வடிவம் கொடுக்க நடவடிக்கை எடுத்தால் டிரில்லியன் டாலர் கனவு சாத்தியமே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in