`அந்த ஒரு இடத்தையும் கூட இழந்து விடக்கூடாது'- நாடும் நமதே, நாளையும் நமதே என முதல்வர் முழக்கம்

கோவையில் தொண்டர்கள் மத்தியில் பேசும் முதல்வர் ஸ்டாலின்
கோவையில் தொண்டர்கள் மத்தியில் பேசும் முதல்வர் ஸ்டாலின் `அந்த ஒரு இடத்தையும் கூட இழந்து விடக்கூடாது'- நாடும் நமதே, நாளையும் நமதே என முதல்வர் முழக்கம்

``கடந்த முறை போல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த  ஒரு இடத்தையும் கூட இழந்து விடக்கூடாது. நாற்பதுக்கு நாற்பதையும் வெல்ல வேண்டும்'' என  தொண்டர்கள் மத்தியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார். 

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் 10 ஆயிரம் பேர்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுகவில் இன்று இணைந்தனர். கோவை சென்னியம்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் அதிகார பூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். அதேபோல் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைந்தனர்.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் இருக்கிறது. வரலாற்றில் இடம்பெற்றிருக்கக் கூடிய கட்சிகளும் இருக்கிறது. அதே நேரத்தில் திடீர் திடீரென தோன்றக்கூடிய கட்சிகளையும் நாம் பார்க்கிறோம். அப்படி தோன்றக்கூடிய கட்சிகள் எல்லாம் தோன்றிய அடுத்த நாளே, ஏன் தோன்றிய அன்றைக்கு, தோன்றுவதற்கு முன்பேகூட,  நான்தான் அடுத்த முதலமைச்சர், நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி அந்த உணர்வோடு தொடங்கப்படக்கூடிய கட்சிகள், 

அவை எல்லாம் இன்றைக்கு எந்த நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது. அனாதையாக அலைந்து கொண்டிருக்கிற காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் திமுக அப்படி அல்ல. 1949-ல் கட்சி  தொடங்கியிருந்தாலும் தேர்தல் களத்திற்கு வந்ததே  1957-ம் ஆண்டுதான். அதற்குப்பிறகு 67-ல் ஆட்சிக்கு வந்தோம். 

ஆட்சிக்கு வந்த அண்ணா,  தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்கிற அந்த உணர்வோடு சட்டமாக நிறைவேற்றி தந்தார். அண்ணா  முதலமைச்சராக பொறுப்பேற்று உயிரோடு இருந்தது ஓராண்டு தான். அந்த ஓராண்டு காலத்தில் சட்டமன்றத்தில் பல முக்கிய  தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொடுத்தார். 

அதிலே முக்கியமானவை சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும் தீர்மானம். இரு மொழிக் கொள்கை தீர்மானம், அதற்கு அடுத்து  தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் தீர்மானம்.  வரலாற்றில இன்றைக்கும் பதிவாகி இருக்கக்கூடிய இந்த மூன்று தீர்மானங்கள்  அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.   அதனால் நாமெல்லாம் இன்று தன்மானத்தோடு தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  

அடுத்து வந்த நம் தலைவர் கலைஞர்  எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார். எமர்ஜென்சி காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்ட போதும்கூட, நாங்களெல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட  அவர் ஆட்சியை பற்றி கவலைப்படவில்லை.  மக்களைப் பற்றித்தான் கவலைப்பட்டார். நாட்டை பற்றித்தான் கவலைப்பட்டார். இந்த நாட்டிலே நம்மைப் போல் வெற்றி பெற்று இருக்க கூடிய கட்சியும்  கிடையாது. நம்மைப் போல் தோற்றிருக்கக்கூடிய கட்சியும்  கிடையாது. இரண்டிலும் நமக்கு தான் பெருமை. 

ஆக வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அந்த திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு ஆறாவது முறையாக  ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கிறது. கலைஞரின் வழியில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி,  சொல்வதை செய்யும் ஆட்சியாக  மட்டுமல்லாது,  சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சியாக  உள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில்  ஏற்கெனவே நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆயிரத்துக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது இடைத்தேர்தலில் நமது கூட்டணி சார்பில் கிட்டத்தட்ட 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட   நம்பிக்கையே இதற்கு காரணம்.  நாடாளுமன்றத் தேர்தலில் இதே போன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு உறுதி அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.  திட்டங்கள் தொடர சாதனைகள் மலர, இந்த ஆட்சி தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு நீங்கள் எல்லாம் இன்றைக்கு களம் இறக்க வேண்டும்.  

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைத்தான் இழந்தோம்.  வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது.  40க்கு 40 கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாடும் நமதே, நாளையும் நமதே. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி மட்டுமல்ல இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான  முயற்சியில் ஈடுபடுவதற்கு பக்கபலமாக அமையும்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in