பிடிஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த அதிரடி பதில்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அளித்த அதிரடி பதில்!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேரில் வெளியான ஆடியோ பற்றிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

ஆளுநர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று உங்களின் சட்டமன்றத் தீர்மானம் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதே. உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறதே?

உண்மைதான். இந்தியா முழுமைக்கும் ஆனதுதான் தமிழ்நாட்டினுடைய குரல். சமூக நீதிக்கு தமிழ்நாடு தான் தலைநகர். அதேபோலத்தான் மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடு தான் தலைநகர். அந்த அடிப்படையில் தான் இது மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றினோம். கோடிக்கணக்கான மக்களோட பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்புகிற சட்ட மசோதாக்களை ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால் அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது. அதனால்தான் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறோம். இந்த கோரிக்கை ஏற்றுக்கொண்டு உடனடியாக என்னுடைய குரலுக்கு வழி சேர்த்த மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி. அதேபோல இன்னும் இருக்கிற மற்ற மாநில முதலமைச்சர்களும் இதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு நிறைவடைய இருக்கிறது. திரும்பிப் பார்க்கையில் என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது. எதிலெல்லாம் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என நினைக்கிறீர்கள்?

ரொம்ப மனநிறைவோடு இருக்கிறேன். ஐந்தாண்டு கால ஆட்சியில் இரண்டு ஆண்டு என்பது பாதி கூட இல்லை. ஆனால் இரண்டே ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதை மட்டும் இல்லை. சொல்லாத பல திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். மிக குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களை தீட்டினது ஒட்டுமொத்த இந்தியாவிலே இப்ப இருக்கிற திமுக அரசால் தான் இருக்க முடியும். எதில் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என்று உங்க கேள்விகளில் கேட்டு இருக்கீங்க. 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்து இருக்கிறோம். இன்னும் சரி செய்யப்பட வேண்டியது நிறைய இருக்கு.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசிருக்கிறாரே? முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன?

சிறுபான்மை சமூகத்தினர் மீதான வன்மம் தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இப்படி சொல்லி இருக்கிறார். இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பாஜகவோட தலைமை அவர்களாகவே கற்பனை செய்து இருக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல. பாஜகவுக்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள் தான். ஆனால் அவர்கள் அமைதியையும். சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள். பாஜக தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலர்கிட்ட திணித்து அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய மனநிலை என்று காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருக்கிறது பொய்களையும் கற்பனை கதைகளையும் மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கிற பரப்புரை இயந்திரமா சமூக ஊடகங்களாக செயல்படுகின்ற பாஜகவின் கணக்கு. பாஜகவின் ஊதுகுழலாக மாறி ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை மறந்து பாஜகவை தாங்கிப்பிடிக்கிற சில ஊடகங்கள். இப்படி பல காரணிகள் மூலம் தன்னுடைய வெறும் அரசியலை பாஜக செய்துக் கொண்டிருக்கிறது. மதச்சார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில் உள்துறை அமைச்சரே இப்படி பேசுவது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுகிற செயல். மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டுதான் தான் இருக்காங்க. கோயபல்ஸின் பொய்கள் நாஜிகளுக்கு. ஆனால், உண்மை மக்களுக்கு. இதுதான் வரலாறு சொல்கிற பாடம். நாங்கள் மக்களை நம்புகிறோம். இந்திய மக்களோட மனசாட்சி என்னைக்கும் உறங்கிடாதுன்னு நம்புகிறோம்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி?

இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப்பபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவங்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in