ஆளுநருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: கூட்டணித் தலைவர்களுடன் களமிறங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

ஆளுநருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: கூட்டணித் தலைவர்களுடன் களமிறங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசுக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையே வெடித்திருக்கும் மோதலில் தங்களின்  அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து  ஆலோசனை நடத்த இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில்  நேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது உரையின் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி, தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இந்த நிலையில் ஆளுநர், முதலமைச்சர் இடையேயான  மோதல் உச்சம் தொட்டிருக்கும் நிலையில் இது குறித்து  கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அண்ணா  அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 13-ம் தேதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20-ம் தேதியும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியும் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் என கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் கூட்டணி கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார். இன்று திருமாவளவனை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் ஆளுநருக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்காக இருக்கலாம் என்று  கூறப்படுகிறது. ஆளுநருக்கு எதிரான  போராட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in