`உங்களின் அன்பை நன்கு அறிவேன்': 100-வது பிறந்தநாளையொட்டி பிரதமரின் தாயாருக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்

`உங்களின் அன்பை நன்கு அறிவேன்': 100-வது பிறந்தநாளையொட்டி பிரதமரின் தாயாருக்கு வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்

100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடியின் தாயாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபாய் தனது 100-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, குஜராத் சென்ற மோடி, தாய்க்கு பாதப்பூஜை செய்து ஆசி பெற்றார். இதனிடையே, தனது பிளாக்கில் அம்மா என்ற தலைப்பில் ஒரு பதிவையும் மோடி வெளியிட்டுள்ளார். அதில், அம்மா- அகராதியில் இதற்கு இணையான வேறு சொல்லைக் காண முடியாது. அன்பு, பொறுமை, நம்பிக்கை இதுபோன்ற எத்தனையோ விதமான முழுமையான உணர்வுகளை இது உள்ளடக்கியுள்ளது.

ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது. அம்மா உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப்பற்றி விரிவாக பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. அம்மா உங்களது ஆரோக்கியமும், நலனும் சிறந்திருக்க நான் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

எங்களது அனைவருக்கும் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டி நிற்கிறேன். உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள பிரதமர் மோடி, உங்கள் தாயார் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் தாய் மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் என் தாயின் உடல்நிலை குறித்து விசாரித்ததை அன்புடன் நினைவு கூர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in