கீழடி அகழ் வைப்பகத்தை மார்ச் 5-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடந்தது. அப்போது ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. நெசவு தொழிற்கூடப் பகுதியின் செங்கல் கட்டுமானங்கள், நீர் மேலாண்மையின் சிறப்பை வெளிக்காட்டும் பல்வேறு வகையான வடிகால் அமைப்புகள், பலவித வண்ண மணிகள், வேளாண்மைக்கு உறுதுணையாக விளங்கிய விலங்கினங்கள், தங்க ஆபரணங்கள், செம்பு மற்றும் இரும்புப் பொருட்கள், நூல் நூற்பதற்கான தக்களிகள், பல்வேறு அளவுகளில் கருப்பு-செவ்வண்ண மட்பாண்டங்கள் போன்றவை கண்டறியப்பட்டன.
இவற்றைக் காட்சிப்படுத்த அகழ் வைப்பகம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் உலோகப் பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பழங்கால கட்டிட மாதிரிகள், காதணிகள், தங்கப் பொருட்கள் ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டிடங்களுடன் இந்த அகழ் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முந்தயவை என அறிவிக்கப்பட்டு்ள்ளன.
எனவே, அதற்கேற்ப பழமை மாறாமல் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப மரவேலைப்பாடுகளும் செய்யப்பட்டு்ள்ளன. செட்டிநாடு கட்டுமானப் பாணியில் தேக்கு மரங்களால் தட்டு ஓடுகளுடன் இந்த வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமிராக்கள், தானியங்கி தீ எச்சரிக்கை கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ் வைப்பகத்தை மார்ச் 5-ம் தேதி மாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிடுவதுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களையும் அவர் பார்வையிடுகிறார்.