உடல்நலக்குறைவால் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

உடல்நலக்குறைவால் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருந்த மூன்று மாவட்ட நிகழ்ச்சிகளில் நாளை முதல் மீண்டும் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருவதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவால் அதனை ஒத்திவைத்தார். வேறு தேதிகளில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அந்த நிகழ்ச்சிகள் நாளை ஜூன் 29 மற்றும் நாளை மறுதினம் ஜூன் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு ஆம்பூருக்கு சென்று தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

அதன் பின்னர் வேலூர் செல்லும் முதல்வர் அங்கு மதியம் 12.30 மணியளவில் விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அங்கு உரையாற்றுகிறார்.

நாளை மறுதினம் 30-ம் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதுடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் பின்னர், சென்னைக்கு புறப்படுகிறார். இதற்காக மூன்று மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மூன்று மாவட்ட சுற்றுப்பயணங்கள் முதல்வரின் உடல்நிலை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது முதல்வர் மீண்டும் உடல்நலம் குணமடைந்து சுற்றுப்பயணம் வருவது திமுகவினர் மத்தியிலும், மூன்று மாவட்ட மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in