முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் சவுக்கு சங்கர் புகார்: என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் சவுக்கு சங்கர் புகார்: என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி யூடியூபர் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று புகார் ஒன்றை அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் ஃபனிந்தர் ரெட்டி ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

முதல்வர் மீது புகார் என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் என்னை சந்திக்க மறுத்து விட்டார். அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியிடம் புகார் அளித்தேன். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம். முதல்வர் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைக்கிறார். அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிறப்பு காட்சிககுக்கு அனுமதி அளித்து தன்னுடைய மகன் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு சிறப்பு காட்சிக்கான உத்தரவை வழங்கியது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். தனது புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட உள்ளேன்" என்றார்.

முதல்வரின் பினாமி நிறுவனம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு, "துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் எல்லா திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. ஆனால் சிறப்பு காட்சிகளுக்காக அரசாணை இரவு தான் வெளியிடப்பட்டது. அதற்கு முன் 5 சிறப்பு காட்சிகள் வெளியாகிவிட்டது. சட்ட விரோதமாக 950க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் ஆளும் ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதில் எனக்கு துளி நம்பிக்கை இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முறையான அமைச்சர் ரகுபதி தான். ஆனால் ரகுபதி மீது உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள அமைச்சரே இத்துறை அமைச்சராக உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி ஆளும் வர்க்கத்தினரை பாதுகாக்க கூடியவராக உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது 98 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடர்பாக மத்திய கணக்காயர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகார் மீது தற்போது வரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு ஆளுநர் மாளிகையில் பணியாற்றக் கூடிய அரசு அதிகாரிகளை வைத்து ஆளுநர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பதாக ஆளுநருக்கு தகவல் வந்துள்ளது. அரசு அதிகாரி அளித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். திருத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் கீழ் நேரடியாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஸ்டாலின், உதயநிதி மற்றும் ஃபனிந்தர் ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்ய கோரி ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளேன். சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் அனைத்தையும் செய்ய உள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in