கேரளம் சென்றார் முதல்வர் ஸ்டாலின்: சீதாராம் யெச்சூரியுடன் சந்திப்பு

கேரளம் சென்றார் முதல்வர் ஸ்டாலின்: சீதாராம் யெச்சூரியுடன் சந்திப்பு

கேரளம் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்துப் பேசினார்.

தலைநகர் டெல்லியில் அண்மையில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, டி.ராஜா, உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அமர் பட்நாயக், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எதிர்கட்சிகள் ஒன்று கூடிய நிலையில், 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டம் இது என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தக் ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, ``இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் விமான நிலையத்துக்குச் சென்று கேரளா மாநிலம், கண்ணூர் பகுதியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய காரணத்தால் நீண்ட நேரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

விமானம் மூலம் கேரளம் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கண்ணூரில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இருவரும், 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.