`மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது தமிழ்நாடு'- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

`மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது தமிழ்நாடு'-  முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

``2000,  3000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உள்ள பிற நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது தமிழ்நாடு'' என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றன.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநருக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. பொங்கல் விழா கொண்டாடுவதற்கு அழைப்பிதழ் அனுப்பிய ஆளுநர் அதில் கூட தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துரைத்து உரையாற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஸ்டாலின், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு தாயுள்ளத்துடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அயலக  தமிழர்களின் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி அமைச்சரையும் நியமித்துள்ளோம்.

பல தலைமுறைகள் கடந்து அயலகத் தமிழர்களின் ஆற்றலும், ஆராய்ச்சி திறனும்,  உழைப்பின் நேர்மையும் உயர்ந்த பொறுப்புகளும் இன்று தனிப்பெரும் வரலாறாக உருவாகியுள்ளன.  வரலாற்றுப் பெருமைமிக்க ஏதென்ஸ்,  ரோம் நகரங்களுக்கு இணையாக பூம்புகார், கொற்கை, தொண்டி போன்ற நகரங்களைக்  கொண்டது நம் பழந்தமிழ்நாடு. ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் உள்ள பிற நாடுகளோடு நல்லுறவு கொண்டிருந்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு" என்று தமிழ்நாட்டின் பெருமைகளை சட்டப்பேரவையில் இன்று மீண்டும் எடுத்து வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார் என்று பல தலைவர்களும் எடுத்து கூறிவரும் நிலையில் தமிழ்நாட்டின் வரலாறை பற்றி சட்டப்பேரவையிலேயே  தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in