`குறைகள் விரைவில் தீர்க்கப்படும்; எதிர்க்கட்சிகள் சொல்வதைப் பற்றி கவலையில்லை'- சீர்காழியில் முதல்வர் பேட்டி

`குறைகள் விரைவில் தீர்க்கப்படும்; எதிர்க்கட்சிகள் சொல்வதைப் பற்றி கவலையில்லை'- சீர்காழியில் முதல்வர் பேட்டி

வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக மழை பெய்து பாதிப்புக்கு உள்ளான சீர்காழி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பெய்து மிகக் கடுமையான பாதிப்பை  சந்தித்திருக்கும்  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு மழையால்  பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், பொது மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் வந்திருந்தார்.

முதலில் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள பச்சை பெருமாநல்லூர்  மற்றும் உமையாள்பதி ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.  நீரால் சூழப்பட்ட வீடுகளையும்,  நீரில் மூழ்கியிருந்த பயிர்களையும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், உமையாள்பதி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில்  அமைக்கப்பட்டிருந்த மழை பாதிப்பின் படங்களைக் கொண்ட அரங்கையும்  பார்வையிட்டார். இந்த கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலங்களிலிருந்து பயிர்களை பிடுங்கி, முதல்வரிடம் காட்டி தங்கள் பாதிப்பை விவசாயிகள் விளக்கினார்கள்.

அதன் பின்னர்  சீர்காழியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியவர், புதிய பேருந்து நிலையம் அருகே  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு  சுமார் 2000 பேருக்கு நிவாரண  உதவிகளை வழங்கினார்.  5 கிலோ அரிசி, பாய், போர்வை,  மளிகைப் பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  அவர்கள் மட்டும் பார்த்தால் போதாது என்று நானும் புறப்பட்டு நேற்று இரவு புதுச்சேரியில் வந்து தங்கியிருந்து, இன்று  காலையில் 7:30 மணிக்கு எல்லாம் கிளம்பி நேரில் வந்து பார்வையிட்டேன்.  பணிகள் திருப்தியாக இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  சில குறைகள் இருக்கிறது. அவையும் விரைவில் தீர்த்து வைக்கப்படும்.

மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.  எதிர்க்கட்சிகள் கேவலப் படுத்துவதற்காகவும், விமர்சனம் செய்வதற்காகவும்,  அரசியல் செய்வதற்காகவும் எதையாவது சொல்வார்கள்.  அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.  பாதிக்கப்பட்ட நிலங்கள் குறித்த கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பிறகு அதற்கான நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்தார்.

முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு,  ரகுபதி,  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும்,  சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,  ராஜ்குமார் உட்பட பலரும் வந்திருந்தினர்.  முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் லலிதா செய்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in