மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ளது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில். இந்த கோயிலை கட்டியவரும், ஆதிபராசக்தி கோயிலின் தலைமை குருவாகவும் திகழ்ந்தவர் பங்காரு அடிகளார். பெண்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது என்ற விதியை தகர்த்தெறிந்து, பெண்களை கோயில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு மாற்றங்களை கொண்டு வந்தவர்.
2 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார். மார்பக சளி பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவு செய்தி, அவரது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
முதல்வரை கண்டதும் பங்காரு அடிகளார் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். அவர்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறி தேற்றினார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுருந்த இரங்கல் செய்தியில், ‘’மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச் சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.
கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக திமுக பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப்படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. அவரது ஆன்மிக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது
கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!