
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் இந்த ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக கொண்ட தேசியவாதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அக்டோபர் 28ம்தேதி தொடங்கி 30ம்தேதி வரை அரசு விழாவாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். வைகோ, திருநாவுக்கரசர், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டவர்கள் ஆண்டு தவறாமல் சென்று அங்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பொதுவாக திமுக சார்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சென்று அஞ்சலி செலுத்துவதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அவரே நேரில் சென்று மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு அவரால் செல்ல இயலாத சூழ்நிலையில் மூத்த அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று மரியாதை செலுத்தினார். இந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் பங்கேற்க இருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்வரும் 29ம் தேதி மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் அவர் மதுரையில் ஓய்வு எடுத்த பிறகு பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
மறுநாள் 30ம் தேதி மதுரையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.