
``முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தெரியாத கபோதி போல இருக்கிறார்'' என்று இறங்கிக் கட்டி விமர்சித்து பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,561 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஈரோடு மாநகராட்சி பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
இம்மாவட்டத்தில், 96 பள்ளிகளை சேர்ந்த 9,107 மாணவ, மாணவிகள் தினமும் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். பள்ளிகளில் காலை உணவு திட்டம், என்பது தேர்தல் வாக்குறுதியில் நாம் சொல்லாத உறுதிமொழி. இதையும் நாம் நிறைவேற்றி உள்ளோம்.
பள்ளி படிப்பு முடித்து, கல்லூரி படிப்புக்கு செல்ல முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மாணவிகளை கருத்தில்கொண்டு, புதுமைப்பெண் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை. முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், இம்மாவட்டத்தில் புதிதாக 795 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 1,1976 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 186 பணிகள் நடந்து வருகிறது.
நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் என்னன்ன செய்தோம் என புள்ளி விவரத்துடன், ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறேன். ஆனால், இங்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரத்துக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை என பேசிவிட்டு சென்றுள்ளார். திமுக ஆட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டில் கொண்டு வந்துள்ள திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி கண் தெரியாத கபோதிபோல் உள்ளார். தயவுசெய்து கண்ணாடி வாங்கிப்போட்டு படியுங்கள். அப்பவாவது தெரிகிறதா என்று பார்ப்போம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நீங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? என நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன்.
இலவசமாக செல்போன் கொடுப்போம் என்றீர்கள். யாருக்காவது செல்போன் கொடுத்தீர்களா? ஆவின் பால் ஒரு லிட்டர் பாக்கெட் 25 ரூபாய்க்கு தருவோம் என்றீர்கள், தரவில்லையே. ஏழை மக்களுக்கு மினரல் வாட்டர் கொடுப்போம் என்றீர்கள், கொடுத்தீர்களா? அவசியமான மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் தருவோம் என்றீர்கள், தரவில்லையே. வீடு இல்லாத ஏழைமக்களுக்கு 3 சென்ட் நிலம் தருவோம் என்றீர்கள், ஆனால் தரவில்லை.
அனைவருக்கும் வங்கி அட்டை தருவோம் என்றீர்கள், தரவில்லை. மாணவர்களின் கல்விக்கடன்களை அடைப்போம் என்றீர்கள், ஆனால், அடைக்கவில்லை. கோ-ஆப்டெக்ஸ் துணி வாங்க 500 ரூபாய் கூப்பன் தருவோம் என்றீர்கள், ஆனால் தரவில்லை. பெண்கள் மேம்பாட்டுக்கு பண்ணை மகளிர் குழு அமைப்போம் என்றீர்கள், அமைக்கவில்லை. இப்படி உறுதிமொழி தந்ததை நிறைவேற்ற முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது.
கொரோனா என்னும் கொடிய நோய், நம்மை மிரட்டிக்கொண்டிருந்தபோது, நிவாரண தொகையாக, குடும்பத்துக்கு 4 ஆயிரம் தருவோம் என்றோம். அதன்படி கொடுத்தோம். இதை, எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா? பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் திட்டம் நிறைவேற்றப்பட்டு, மகளிர் பயன் அடைந்து வருகிறார்கள். இது, எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?
நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்பு என்னென்ன உறுதிமொழி அளித்தோமோ, அதையெல்லாம் நிறைவேற்றி வருகிறோம். ஈரோடு மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திடீரென இடைத்தேர்தல் வந்த காரணத்தால் அந்த பணிகள் நிலுவையில் உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயிலாக அந்த பணிகள் எல்லாம் வேகமாக, நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலத்தில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் மீதமுள்ள 15 சதவீத வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். மூன்றே ஆண்டுகளில் அத்தனை பணிகளையும் நிறைவேற்றுவோம். நான், சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சொன்னதை செய்து காட்டுவேன்.
இத்தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர், உங்கள் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ''கை'' சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்" என்று பேசினார்.
'மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால்' என்று எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார். தற்போது 'கண் தெரியாத கபோதி போல் இருக்கிறார்' என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். அரசியலில் விமர்சனத்தின் தரம் மிகவும் தாழ்ந்து போவதற்கு இந்த பேச்சுகள் உதாரணமாக இருக்கின்றன.