
புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் முழுமையான நிதிநிலை அறிக்கை கடந்த 26-ம் தேதி அன்று முதல்வர் ரங்கசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த வெளியிட்ட ரங்கசாமி விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அன்றைய தினம் அறிவித்திருந்தபடி புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகள் வாங்கி இருந்த கடன்களை தள்ளுபடி செய்து முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். 2022-ம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூபாய் 13.8 கோடி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதனால் புதுச்சேரி மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு 5 ஆயிரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும், நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அவரது நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்காக 124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு முக்கிய நலத்திட்ட அறிவிப்பாக மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ரங்கசாமி அறிவித்துள்ளார். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய மகிழ்ச்சியான அறிவிப்புகளை அவர் வெளியிட்டாலும் அரசு நிர்வாகத்தில் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் அவரது இன்றைய பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. 'அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு நாங்கள் அனுப்பும் கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வேகமாக வளர்ச்சி அடையும்' என்றும் அவர் குறிப்பிட்டது அவரது மன ஓட்டத்தை வெளிக்காட்டியது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மூலமாக மத்திய ஆளும் பாஜக, ரங்கசாமிக்கு பலவிதமாக குடைச்சல்களை கொடுத்து வருவதும், அதிகாரிகள் முதல்வரின் பேச்சை கேட்காமல் ஆளுநரின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வதும் அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்திருக்கிறது. அதன் விளைவாகவே அதிகாரிகளை அவர் குற்றம் சாட்டி சட்டசபையில் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.