சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியா?: போர்க்கொடி தூக்கும் ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் - கலக்கத்தில் காங்கிரஸ்

சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியா?: போர்க்கொடி தூக்கும் ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் - கலக்கத்தில் காங்கிரஸ்

சச்சின் பைலட்டை முதல்வராக்கினால், தங்களின் பதவியை ராஜினாமா செய்வோம் என அசோக் கெலாட்டுக்கு விசுவாசமான 90க்கும் மேற்பட்ட ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படும் பட்சத்தில், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட்டுக்குப் பதிலாக துணை முதல்வர் சச்சின் பைலட் நியமிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புவதாக வெளியான செய்திகள் அம்மாநிலத்தில் நெருக்கடியைத் தூண்டியுள்ளன.

அசோக் கெலாட் அல்லது அவர் விரும்பும் ஒருவர்தான் முதல்வராக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ள எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். 2020ல் சச்சின் பைலட் அசோக் கெலாட்டுக்கு எதிராக நெருக்கடியை உருவாக்கியபோது அரசாங்கத்தை ஆதரித்த ஒருவர்தான் அடுத்த முதல்வராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நெருக்கடியைக் சமாளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக பேச அஜய் மக்கான் மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவை ஜெய்ப்பூருக்கு அனுப்பினார். ஆனால், நவராத்திரி விழாவையொட்டி பல எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கப்போவதில்லை என ராஜஸ்தான் கேபினட் அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான அஜய் மக்கன், மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இன்று டெல்லி திரும்புகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலும் கேரளாவில் இருந்து டெல்லி செல்கிறார். இவர்கள் ராஜஸ்தான் சூழல் குறித்து தலைமைக்கு இன்று அறிக்கை அளிப்பார்கள். இதனைத் தொடர்ந்து அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு விசுவாசமான காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கிளர்ச்சியால், மாநில சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவரானால் சச்சின் பைலட் முதல்வராவாரா அல்லது கெலாட்டின் விசுவாசி முதல்வர் ஆவாரா என்ற கேள்வி இப்போது பலமாக எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in