பொது இடங்களில் பொல்லாப்பைத் தேடும் அமைச்சர்கள்!

அதிருப்தியில் முதல்வர்... அலட்டிக்கொள்ளாத கழகத்தினர்!
ஸ்டாலின்
ஸ்டாலின்பொது இடங்களில் அத்துமீறும் திமுகவினர்...

“பொது இடங்களில் கழகத்தினர் பேச்சிலும் செயலிலும் கண்ணியம்காக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வருத்தம் கலந்த கவலையுடன் சொல்லி மாதங்கள் கடந்துவிட்டது. ஆனாலும் திமுகவினர் திருந்தியபாடில்லை. இன்னும் சொல்லப் போனால், முன்னைவிட இப்போது கட்டுப்பாடு மீறுவது அதிகரித்திருக்கிறது!

“கழகத்தினரின் செயல்பாடுகள் பற்றி வரும் செய்திகள் எனது தூக்கத்தைப் பறிக்கிறது” என்று முதல்வர் சொன்னதற்குப் பிறகு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர் பெருமக்களே பொதுவெளியில் பொல்லாப்பைத் தேடிக்கொள்வது முதல்வரை மேலும் வேதனையில் ஆழ்த்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி “ஓசியில் தானே பயணம் செய்கிறீர்கள்” என பொது இடத்தில் பெண்களிடம் பேசி அதிர்வை ஏற்படுத்தினார். அதனால் வந்த விமர்சனங்களையும் , அதைவைத்து சமூகவலைதளத்தில் எழுந்த சர்ச்சைகளையும் சரிபண்ணவே முதல்வர் மிகவும் மெனக்கிட வேண்டி இருந்தது. 

அடுத்தபடியாக, திமுக பேச்சாளர் சைதை சாதிக், குஷ்பு உள்ளிட்ட பாஜக பெண் பிரபலங்கள் குறித்து தெரிவித்த அநாகரிகமான கருத்துகள் டெல்லி வரைக்கும் சர்ச்சையானது. அந்த அலை ஓய்வதற்குள் திமுகவினர் இருவர், பந்தோபஸ்து பணியில் இருந்த பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்து ஆளும் கட்சியின் இமேஜை அடியோடு சரித்தார்கள்.

அடுத்த அதிரடியாக அண்மையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வுக்கு சென்ற இடத்தில் திமுக தொண்டர் ஒருவரை கல் எடுத்து எறிந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அமைச்சரின் மாண்பை கேலி செய்தது.

திமுக தொண்டர் மீது கல் வீசும் அமைச்சர் நாசர்...
திமுக தொண்டர் மீது கல் வீசும் அமைச்சர் நாசர்...

இதேபோல், பேச்சிலும் செயலிலும் தரை லெவலுக்கு இறங்கி ‘அடிக்கும்’ மூத்த அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் உதயநிதி முன்னிலையில் தொண்டர் ஒருவரை கை நீட்டி அடித்தார். இவர்களை எல்லாம் பார்த்துவிட்டு, சீனியர் எம்பியான டி.ஆர்.பாலுவும், “ஆசிரியர் வீரமணி மீது கைவைத்தால் கையை வெட்டுவேன்” என்று உச்சமாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் சேலத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பட்டியலினத்து இளைஞர் ஒருவரை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் திமுகவை வம்புக்கு அழைத்தது. இப்படியெல்லாம் அத்துமீறும் திமுகவினர் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், அமைச்சர்களை முதல்வரால் வெளிப்படையாக எதுவும் செய்யமுடியவில்லை. அதனால் அத்தகைய சம்பவங்கள் தொடர்கதை ஆகின்றன. இப்படி தொடர்ச்சியாக திமுகவினர் அத்துமீறுவதால் முதல்வருக்குத்தான் வலியும் வேதனையும் என்பதை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். “திமுகவுக்கு இது வாடிக்கையான ஒன்று தான். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல ஆட்சிக்கு வரக் காரணமாக இருக்கும் தொண்டர்களை அடிப்பது அவர்களின் இயல்பாக மாறிவிட்டது. கண்ணியத்தோடு செயல்பட வேண்டிய அமைச்சர்கள் கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறார்கள். இவர்களை பார்த்து மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். இதற்கெல்லாம் மக்கள் நிச்சயம் முடிவுகட்டுவார்கள். இதைத் தவிர வேறென்ன சொல்ல இருக்கு” என்று அலுத்துக்கொண்டார் அவர்.

சரவணன்
சரவணன்

திமுக செய்தித்தொடர்பாளர் சரவணனோ இதற்கு வேறு அர்த்தம் சொன்னார். “தொண்டர்கள் மீதுள்ள அதீத அன்பால், உரிமையால் அமைச்சர்கள் அவர்களை செல்லமாக அடிக்கிறார்கள். பத்து வருடம் ஆட்சியில் இருந்த ஜெயக்குமார் போன்றவர்களுக்கு தொண்டர்களிடம் இப்படி உரிமையுடன் செயல்பட முடியவில்லை என்ற பொறாமை. தமிழ்நாட்டில் எங்கள் தளபதி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை குறைசொல்ல முடியாதவர்கள் இதையெல்லாம் பெருங்குறையாகச் சொல்கிறார்கள்’’ என்றார் சரவணன்.

அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையும் அவ்வளவு திருப்தியாக இல்லை என்கிறார்கள். “திமுகவினரின் இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுக்கு தேவையற்ற அவப்பெயரை உருவாக்கி வருகிறது. இதெல்லாம் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சவாலாக நிற்கலாம்” என்று உளவுத்துறை ரிப்போர்ட் செய்திருக்கிறதாம்.

இனியும் இந்தப் போக்கை தொடரவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் முதல்வர், ஈரோடு இடைத் தேர்தல் முடிந்த பிறகு, அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைத்து பேசும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதன் பிறகாவது அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் அடக்கி வாசிக்கிறார்களா என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in