மணீஷ் சிசோடியாவுக்கு முதல்வர் பதவி; எம்எல்ஏக்களுக்கு ரூ.5 கோடி - பாஜக மீது ஆம் ஆத்மி பகீர் புகார்!

மணீஷ் சிசோடியாவுக்கு முதல்வர் பதவி; எம்எல்ஏக்களுக்கு ரூ.5 கோடி - பாஜக மீது ஆம் ஆத்மி பகீர் புகார்!

மணீஷ் சிசோடியா மீதான வழக்குகளை கைவிட்டு அவரை முதல்வராக்குவதாகவும், அணிமாறும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.5 கோடி வழங்குவதாகவும் பாஜக சார்பில் பேரம் பேசப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" குறித்த தகவல்களை வெளியிட்டார். அப்போது, "எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சியை நாங்கள் தோற்கடித்தோம். தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகளின் அரசுகளை கவிழ்ப்பதற்காக "ஆபரேஷன் தாமரை" திட்டத்தை பாஜக பயன்படுத்துகிறது. அதை மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் நாம் பார்த்தோம்" என்று கூறினார்.

மேலும், “மணீஷ் சிசோடியாவிடம் நீங்கள் பாஜகவுக்கு வாருங்கள், நாங்கள் உங்களை முதலமைச்சராக்குவோம் என்று சொன்னார்கள். அவர்கள் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசாங்கத்தை வீழ்த்த முயன்றனர். பாஜகவில் யார் இந்த வாய்ப்பை வழங்கினர் என்பது பற்றி சரியான நேரத்தில் வெளிப்படுத்துவோம். கட்சியின் முக்கிய தலைவர்கள் எப்போது, ​​​​எப்படி என்று முடிவு செய்வார்கள்" என தெரிவித்தார். சவுரப் பரத்வாஜ் இது தொடர்பான வீடியோவையும் திரையிட்டு காட்டினார். தன்னிடமும், தனது கட்சியினரிடமும் பாஜக சார்பில் பேரம் பேசப்பட்டது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாக மணீஷ் சிசோடியா நேற்று தெரிவித்திருந்தார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

அதே நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டில் இருந்து கவனத்தை திசை திருப்பவே மணீஷ் சிசோடியா இத்தகைய புகார்களை கூறுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக தலைவர் பர்வேஷ் வர்மா, “அரசுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திய மதுக் கொள்கை குறித்து ஆம் ஆத்மியிடம் இருந்து பதில்களை மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த கட்சி தொண்டர்களை தொலைபேசியில் பேச வைத்து ஆடியோ ஆதாரம் என சொல்கிறார்கள். அவர்களின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அடுத்ததாக ஆம் ஆத்மியின் முக்கிய தலைவராக இருக்கும் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ சோதனை நடத்தியதில் இருந்து ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கேஜ்ரிவால் மற்றும் சிசோடியா இருவரும் தேர்தல் பணிகளுக்காக மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in