
களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மதுரையில் இன்று ஐந்து மாவட்ட அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளார். அங்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த ஐந்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை இன்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து மதுரையில் நாளை ( மார்ச் 6) களஆய்வு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கின்றார்.
அன்றைய தினம் மாலை, நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பங்கேற்கிறார். இரவு, நாகர்கோவிலில் தங்கும் அவர், மார்ச் 7-ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.