
இன்று தனது 101-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15-வது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆனவர் சங்கரய்யா. அவர் இன்று தனது 101-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், "பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால்தமிழர் தோழர்.சங்கரய்யா அவர்களுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன் போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க!" என்று கூறியுள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல், சமூக, பொருளாதார விடுதலை போராட்டத்தில் நூற்றாண்டை கடந்துள்ள வரலாற்று நாயகன். “அரசியல்தலைவன்” என்றால் யாரென அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்காட்ட நம்மிடம் இருக்கும் மகத்தான முன்னுதாரணம். தோழர் சங்கரய்யாவுக்கு 101 வது பிறந்தநாள். வணங்கி மகிழ்வோம்" என்று தெரிவித்துள்ளார்.