`அதனை கண்டப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'- எதைக்குறிப்பிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்ஆட்சி பொறுப்பேற்ற 20 மாதங்களில் பல சாதனைகளை புரிந்துள்ளோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

அரசு பொறுப்பேற்று 20 மாதங்களில் கரோனாவை வென்று, மழை வெள்ளத்தில் மக்களை காத்தோம் என்ற பல சாதனைகளை செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ளத் தடுப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’எத்தனையோ பாராட்டு விழாக்களில் நான் பங்கேற்றுள்ளேன். ஆனால் மழை, வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்ட உங்களை பாராட்டும் இந்த விழாவில் பங்கேற்பதில் நான் பெருமைக் கொள்கிறேன். ஆட்சி பொறுப்பேற்ற 20 மாதங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளோம். ஆனால் இரண்டு சாதனைகள் மக்களிடத்தில் நமக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

ஒன்று கரோனாவை வென்றோம். மழை, வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாத்தோம். 10 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக எதுவும் செய்யாமல் விட்டுவிட்ட காரணத்தினால் அந்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அந்த நெருக்கடிகளை நாம் பாடமாக எடுத்துக் கொண்டோம்.

சமூக வலைதளங்களில் கடந்து முறை தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை என பொதுமக்கள் புகைப்படங்களை பகிர்ந்தனர். அதனை கண்டப் போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்படியான பாராட்டு மழையில் நனைவதற்கு காரணம் நீங்கள் தான். இந்த பணிகளை ஒருங்கிணைத்து செய்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

குறிப்பாக அமைச்சர் நேருவுக்கு எனது பாராட்டுகள். கட்சி பணியாக இருந்தாலும் சரி துறை சார்ந்த பணியாக இருந்தாலும் நேருவுக்கு நிகர் நேருதான். இதேப்போல் தான் சென்னையின் அமைச்சர்களும், மேயர் பிரியா உட்பட அனைவரும்.

எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிடமாடல் ஆட்சி , கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சென்னை மேயராக இருந்துள்ளேன். ஒவ்வொரு வார்டும், ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும்’’ என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in