``இந்தியா கூட்டணிக்கு அகில இந்திய அளவில் தொகுதி பங்கீடு கிடையாது. மாநில அளவில் தான் தொகுதி பங்கீடு. இந்தியா கூட்டணியில் 14 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழு கூடி தேர்தல் வியூகங்களை வகுப்பார்கள்'' என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’இந்தியா ஜனநாயகமும், எதிர்க்கட்சியும் இல்லாத நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. இந்தியா அல்லது பாரதம் என்பது மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம் என்று தான் அரசியல் சாசனத்தில் உள்ளது. இந்நிலையில் பாஜகவின் நோக்கம் என்னவென்று புரியவில்லை.
ஜி 20 மாநாடு அழைப்பிதழில் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் ஹிந்தியில் பாரத் என்றும் எழுதலாம். நாங்கள் பாரதத்திற்கு விரோதி அல்ல. ஆனால் பாஜக இந்தியாவை விரோதியாக பார்க்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்த அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5 திருத்தங்களை செய்ய வேண்டும். மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல்.
எம்மதமும் சம்மதம் என்பதுதான் காங்கிரசின் கொள்கை. நாங்கள் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. இந்தியா கூட்டணிக்கு அகில இந்திய அளவில் தொகுதி பங்கீடு கிடையாது. மாநில அளவில் தான் தொகுதி பங்கீடு. இந்தியா கூட்டணியில் 14 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழு கூடி தேர்தல் வியூகங்களை வகுப்பார்கள்.
வடநாட்டில் சனாதனம் என்பது இந்து மதம் தான். தமிழகத்தில் சனாதனம் என்பது ஜாதிய வாதம், பெண் இழிவு என்றும் வடநாட்டில் இந்து மதம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. நாம் பேசுவது வேறு, அவர்கள் புரிந்து கொள்வது வேறு. ஆதலால் சர்ச்சை ஏற்படுகிறது’’ என தெரிவித்தார்.