மாநில முதல்வரை படுத்தியெடுக்கும் நியூமராலஜி!

நியூமராலஜி
நியூமராலஜி

இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகையில், மக்கள் மத்தியிலான பிரச்சினைகளைவிட எண் ஜோதிடமே பிரதானமாய் ஆழ்ந்திருக்கும் முதல்வரை சட்டீஸ்கர் மாநில மக்கள் கவலையோடு ஏறிட்டு வருகிறார்கள்.

சட்டீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகல் இருக்கிறார். இவருக்கு நியூமராலஜியில் அதீதமாக நம்பிக்கை உண்டு. தனது பிறந்த தேதியான 23 என்பதை அதிர்ஷ்ட எண்ணாகவே பாவித்து வருகிறார். இதற்கு முன்னதாக மாநில தலைவராக பூபேஷ் இருந்தபோது அவர் பயன்படுத்திய வாகனங்கள் அனைத்திலும் 23 என்ற எண் கட்டாயம் இருக்கும்.

மாநில முதல்வரான பிறகும் எண் கணித பித்து அவரை விடவில்லை. அண்மையில் கூட முதல்வருக்கான பிரத்யேக வாகனம் உட்பட வாங்கப்பட்ட பல அரசு வாகனங்களும் 23 என்ற எண்ணுடனே வலம் வருகின்றன. போதாக்குறையாக நடப்பாண்டு சட்டப்பேரவை தேர்தல் வேறு வருகிறது. 2023 என்ற ஆண்டில் இருக்கும் ’23’ அடிப்படையில் மீண்டும் தானே முதல்வராக பதவியேற்பேன் என்ற தீர்மானத்துடன் உலா வருகிறார்.

பூபேஷ் பாகல்
பூபேஷ் பாகல்

நாடு நெடுக பல்வேறு மாநிலங்களிலும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பாஜகவே ஆண்டு வருவதன் மத்தியில் எஞ்சியிருக்கும் எதிர்க்கட்சி மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கரும் ஒன்று. பாஜகவுக்கு எதிராக திடமாக தேர்தலில் களப்பணியாற்ற வேண்டிய பூபேஷ் பாகல் இப்படி எண் கணிதத்தில் ஆழ்ந்திருக்கிறாரே என்ற காங்கிரஸ் கட்சியினர் நொந்துக்கொண்டுள்ளனர்.

எண் கணிதம் என்பதை கண் மூடித்தனமாக பின்பற்றுவது தவறு என்பதற்கு, சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரே சாட்சியாக இருக்கிறார். பாஜக சார்பில் முன்னதாக சட்டீஸ்கரை ஆட்சி செய்தவர் ராமன் சிங். சுமார் 3 முறை பதவி வகித்த ராமன் சிங், 4 என்ற இலக்கத்தின் மீது ஏகப்பிரியம் கொண்டவர். வாகனங்கள் தொடங்கி கண்ணில் படும் எல்லாவற்றிலும் நாலாவிதமாய் நான்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.

ராமன் சிங்
ராமன் சிங்

2018 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்ட போது ராமன் சிங் இன்னும் உற்சாகமாக இருந்தார். ஏனெனில் 3 ஆட்சிக் காலங்களை பூர்த்தி செய்து சட்டீஸ்கரின் முதல்வராக நான்காம் முறையாக தன்னுடைய ’4’ ராசி அமத்தும் என நம்பினார். ஆனால் அந்த 4, கருணையின்றி ராமன் சிங்கை கவிழ்த்து விட்டது. அடுத்து ஆட்சியை பிடித்திருப்பவர் 23 என்ற எண்ணில் பிடிப்பாக இருக்கிறார். ’2023’ தேர்தலில் இருக்கும் 23-ஐ மட்டுமே வெகுவாய் நம்பியிருக்கிறார்.

தங்களைப் பற்றி எண்ணாது, எண்களின் மீது கண்ணாக இருக்கும் சட்டீஸ்கர் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நவம்பருக்குள் பதில் அளிக்கத் தயாராகி வருகிறார்கள். பார்போம், இம்முறை வெல்லப்போவது எண் கணித ஜோதிடமா அல்லது மக்களின் எண்ணமா என்று!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in