`தேர்தலின்போது பதிவான சிசிடிவி காட்சியை தாக்கல் செய்யவும்'

தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
`தேர்தலின்போது பதிவான சிசிடிவி காட்சியை தாக்கல் செய்யவும்'

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு கடந்த 4ம் தேதி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலின்போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை பறித்து கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். குதிரை பேரமும், கட்சி தாவலும் நடக்க வாய்ப்புள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு விளக்கமளிக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டும், பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், தேர்தல் அதிகாரிக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் அதிகாரி இளவரசன் நேரில் ஆஜரானார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் 26ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் காவல்துறையினர் தங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தங்களை சிறையில் அடைத்து விட்டு மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாகவும் கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உடனடியாக மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தபோது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க தேர்தல் அதிகாரிக்கு அவகாசம் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.