அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விடிய விடிய நடந்த விசாரணை; நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் முழு விவரம்

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் விடிய விடிய நடந்த விசாரணை; நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் முழு விவரம்

“அதிமுக பொதுக்குழு நடைபெறுவதற்கு தடையில்லை. 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது” என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்.

பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அடுத்து ஓபிஸ் சார்பில் நேற்று அவசர வழக்காக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகத்தின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை அண்ணா நகரில் உள்ள துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்றது. இதனால் நேற்று இரவு முழுவதும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஸ் தேர்ந்தெடுக்கும் போது கட்சியின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதில், “கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு பதிலாகத் தொண்டர்களால் தேர்ந்தெடுப்பார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கும் முறையில் பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழு விதிகளை மாற்றுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை” எனத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த விதிகளின் அடிப்படையில் தொண்டர்களால் மட்டுமே கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற வாதத்தை ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்தனர்.

“ஒற்றைத் தலைமைக்கு யாரெல்லாம் சம்மதம் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமைக்கு அனுமதி கொடுக்காதவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விதிகளை வகுக்கவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் சேர்க்க முடியாது. பொதுக்குழுவில் என்ன நடக்கப் போகிறது என்பதை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 15 நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்து பொதுக்குழுவைக் கூட்டலாம்” எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “அதிமுக பொதுக்குழு நடைபெறுவதற்குத் தடையில்லை. 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது. ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அனுமதி இல்லை” எனத் தீர்ப்பு வழங்கினார்கள். நள்ளிரவில் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் அதிகாலை 4.15 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் வீட்டிற்கு வெளியே காத்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in