பிரதமர் வேட்பாளர் கார்கே; ராகுலுக்கு தந்திரமாக செக் வைக்கும் மம்தா- கேஜ்ரிவால் கூட்டணி!

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
Updated on
3 min read

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில், யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் மல்லிகார்ஜுன கார்கேயை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று எழுந்த குரல்தான். இது மறைமுகமாக ராகுல் காந்திக்கு வைத்த ‘செக்’ என்கிறார்கள்.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த வீழ்ச்சிக்குப் பின்னர் கூடிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப் பட்டாலும் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது பிரதமர் வேட்பாளருக்கான முன்மொழிவுதான்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பிரதமர் வேட்பாளர் கனவோடு வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில், எல்லாவற்றையும் கலைத்துப்போடும் விதமாக கார்கேயை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மம்தா பானர்ஜி. இதனை உடனே வழிமொழிந்தார் அர்விந்த் கேஜ்ரிவால். இந்த முடிவை 12 கட்சிகளின் தலைவர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் மவுனம் காத்தனர். முக்கியமாக, கார்கேயை பிரதமர் வேட்பாளராக்கும் இந்த முடிவுக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்தியா கூட்டணி கூட்டம்
இந்தியா கூட்டணி கூட்டம்

ராகுல் காந்தியை நேரடியாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்காவிட்டாலும்கூட 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில், அவரை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ். கார்கே காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்தாலும், கட்சியின் முகமாக எங்கும் நிறைந்திருப்பவர் ராகுல்தான். வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும்கூட காங்கிரசின் மனதுக்குள் இப்போதும் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்.

ஒருவேளை, நடந்துமுடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்திருந்தால், ராகுலை பகிரங்கமாகவே பிரதமர் வேட்பாளராக்கும் முடிவோடுதான் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸாரின் ஆசைக்கு செக் வைத்துவிட்டது. இந்த இக்கட்டான சூழலில்தான் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்துக்கு நாள் குறித்தது காங்கிரஸ் கட்சி.

டிசம்பர் 6-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு மம்தா, நிதிஷ், அகிலேஷ் போன்றவர்கள் முரண்டுபிடித்தனர். இதனால் அவர்கள் ஏதோ முக்கிய திட்டத்துக்கு தயாராகிறார்கள் என்று உணர்ந்தது காங்கிரஸ். அதனைத் தொடர்ந்துதான் மாநில அளவில் பலமுள்ள கட்சிகளே கூட்டணிக்குத் தலைமை தாங்கட்டும் என்ற முடிவுக்கு அனைவரும் ஒத்துக்கொண்டனர். மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்தனர்.

ஆனாலும் காங்கிரஸே எதிர்பார்க்காத திருப்பமாக கார்கேயை வேட்பாளராக்கும் முடிவை மம்தாவும், கேஜ்ரிவாலும் முன்வைத்து பரபரப்பாக்கினர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த கார்கே பிரதமர் வேட்பாளரானால் தேசிய அளவில் கவனம் பெறமுடியும் என்று சொல்லி இருக்கிறார்கள் இவர்கள். இதற்கு கூட்டணிக்குள் ஒரு சிலரைத் தவிர பெருவாரியானவர்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த முடிவை மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக நிராகரித்துள்ளார். “முதலில் வெற்றிபெற உழைப்போம், அடுத்ததாக எம்பி-க்கள் ஆதரவுடன் பிரதமரை தேர்ந்தெடுப்போம்” என்று ஜகாவாங்கி இருக்கிறார் கார்கே.

கார்கே இப்படி மறுதலிக்கக் காரணம் ராகுல்தான். ராகுல் காந்தி இருக்கும்போது நம்மை பிரதமர் வேட்பாளராக்குவதாகச் சொல்கிறார்களே என்ற தர்மசங்கடத்தில்தான் இதை உடனடியாக மறுத்திருக்கிறார் கார்கே. அவரும் காங்கிரஸ் தலைவர்களும் நினைப்பது போலவே இது மம்தாவும் கேஜ்ரிவாலும் கூட்டுச்சேர்ந்து கொண்டு ராகுலுக்கு வைக்கும் ‘செக்’தான்.

2014, 2019 மக்களவைத் தேர்தல்கள் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் எல்லாம் ராகுலை முன்னிறுத்திய காங்கிரசுக்கு மிஞ்சியது என்னவோ தோல்விதான் மிஞ்சியது. எனவே, ராகுல் முன்னிறுத்தப்படுவதை மம்தா, கேஜ்ரிவால் போன்றவர்கள் விரும்பவில்லை. ராகுல் தனிப்பெரும் தலைவராக வருவதையும் இவர்கள் ரசிக்கவில்லை. அதேசமயம், பிரதமர் வேட்பாளராக தாங்கள் முன்னிறுத்தப்படுவதை காங்கிரஸ் விரும்பாது என்பதும் இவர்களுக்குத் தெரியும். அதனால் தான் தந்திரமாக கார்கேயை கைகாட்டி இருக்கிறார்கள்.

இவர்களின் இந்தத் திட்டமெல்லாம் காங்கிரசுக்கும் தெரியும். கார்கேயை இப்போது பிரதமர் வேட்பாளராக்கினால் ராகுலின் அரசியல் எதிர்காலமே அஸ்தமித்துப் போகலாம். அவருக்கான முக்கியத்துவம் குறைவது காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனமாக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

கார்கேயை பிரதமர் வேட்பாளராக்கும் முடிவை நிதிஷ் குமாரும் ஏற்கவில்லை. ஏனென்றால், அவர் தொடக்கம் முதலே பிரதமர் வேட்பாளர் கனவில் மிதக்கிறார். இதற்காக பீகார் மாநிலத்தில் லாலு தரப்பையும் அவர் சரிக்கட்டி வைத்திருக்கிறார். நிதிஷ் டெல்லியை நோக்கி நகர்ந்துவிட்டால் தற்போது பீகார் துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவை முதல்வர் இருக்கைக்கு நகர்த்திவிடலாம் என்பதால் லாலு தரப்பும் நிதிஷின் பிரதமர் கனவை மறைமுகமாக ஆசிர்வதிக்கிறது. கடந்த 2019 தேர்தலிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதனால் அவர் மம்தா- கேஜ்ரிவால் கூட்டுப் பிரகடனத்துக்கு கருத்துத் தெரிவிக்காமல் மவுனம் காத்தார்.

மம்தாவுக்குமே பிரதமர் கனவு உள்ளது. கார்கேயை முன்னிறுத்தும் சாக்கில், இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் வேண்டும் என்ற மெசேஜை மறைமுகமாகச் சொல்லியுள்ளார் மம்தா. கார்கேயை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸே விரும்பாத பட்சத்தில் மற்றவர்கள் கூடி தன்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மம்தாவுக்குள் இருக்கிறது.

பிரதமர் வேட்பாளர் பிரச்சினையில் இப்படி ஆளாளுக்கு ஒரு திட்டத்துடன் காய்நகர்த்திக் கொண்டிருக்க, ரொம்பவே பதற்றமாகி இருக்கிறார் ராகுல். தனக்கு ‘கட்டம்’ கட்டி ஆடப்படும் இந்த ஆட்டத்தில் எதுவுமே செய்ய இயலாத கையறு நிலையில் தற்போது அவர் இருக்கிறார். ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி மட்டும் கிட்டி இருந்தால் ராகுலுக்கு நிச்சயம் இந்த நிலை ஏற்பட்டிருக்காது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in