திமுக எம்.பி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - அமலாக்கத்துறை அதிரடி!

கவுதமசிகாமணி எம்.பி
கவுதமசிகாமணி எம்.பி
Updated on
1 min read

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கவுதமசிகாமணி உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 -  11 காலகட்டத்தில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை  அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணிக்கு  விழுப்புரம் வட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரிக்கு அனுமதி அளித்தார். அதில் அளவுக்கு அதிகமாக செம்மண்  எடுக்கப்பட்டதாக, அடுத்து வந்த அதிமுக  ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 2012-ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதமசிகாமணி ஆகியோர் வீட்டில் ஜூலை 17ம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி

சோதனையில் கணக்கில் வராத 81 லட்சம் ரூபாய் பணம்,  13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரிட்டன் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.  வங்கிக் கணக்கில் இருந்த 41.90 கோடி முடக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கவுதமசிகாமணி, ராஜ மகேந்திரன் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர்  ரமேஷ், 90 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து  விரைவில் இந்த வழக்கு  விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in