
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன், ஐபிஎல் கிரிக்கெட் வீரர் ஜாஸ் இந்தர் சிங்கிடம் அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2 கோடி லஞ்சம் கேட்டதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.
மே 22 அன்று முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் ஜஷான் மீது பகவந்த் மான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் கிரிக்கெட் வீரரின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த நிலையில் அவர் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஐபிஎல் வீரர் ஜாஸ் இந்தர் சிங் மற்றும் அவரது தந்தை மஞ்சிந்தர் சிங் ஆகியோரை ஆஜர்படுத்தினார். ஜாஸ் இந்தர் சிங் ஐபிஎல் அணியின் பஞ்சாப் கிங்ஸில் இடம்பிடித்துள்ளார். ஆனால் அவர் பிளேயிங் 11ல் இல்லை என்று மான் கூறினார். மேலும், சன்னியுடன் மஞ்சிந்தர் சிங் இருக்கும் படங்களையும் முதல்வர் காட்டினார்.
பஞ்சாப் பவனில் ஜாஸ் இந்தர் சிங்கும், அவரது தந்தையும் முதல்வராக இருந்த சன்னியை சந்தித்தனர். சன்னி அவர்களின் வேலை முடியும் என்று கூறினார் என்றும், சன்னியின் மருமகன் ஜஷானை சந்திக்குமாறும் அவர்களிடம் கூறப்பட்டது என்றும் பகவந்த் மான் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியன் பிரீமியர் லீக்கைப் பார்க்க பகவந்த் மான் இமாச்சல பிரதேசத்தில் இருந்தபோது ஜாஸ் இந்தர் சிங், இந்த விவகாரத்தை அவரிடம் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு சன்னியிடம் இருந்து உடனடியாக எதிர்வினை எதுவும் இல்லை என்றாலும், அவர் முன்பு பகவந்த் மானின் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.