தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றா? ஏமாற்றா?

தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றா? ஏமாற்றா?

தமிழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதியால் ரூ.5 ஆயிரம் திருமண நிதியுதவியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், 2009-ம் ஆண்டு 25 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

இதன் பின் 2011-ம் ஆண்டு இத்திட்டத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 2016-ம் ஆண்டு தாலிக்கான தங்கத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக ஜெயலலிதா உயர்த்தி வழங்கினார்.

ஆனால், இத்திட்டம் 3 ஆண்டுகளாக பயனாளிகளைச் சென்றடையவில்லை எனவும், 3,34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2021-2022-ம் நிதியாண்டிற்கு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 762 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 94,700 பயனாளிகள் பயனடைவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து சில பயனாளிகளுக்கு அவரே உதவிகளையும் வழங்கினார்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

இந்நிலையில்தான், இத்திட்டம் திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச்சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இதன் மூலம், அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய், அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக பட்ஜெட்டில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஆனால், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம் தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.

பி.சுகந்தி
பி.சுகந்தி

தமிழக அரசின் திட்ட மாற்றம் குறித்து பெண்கள் அமைப்புகள் என்ன நினைக்கின்றன என அறிய அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தியிடம் பேசினோம். "அரசு பள்ளிகளில் பிளஸ்- 2வரை படித்த ஏழை, எளிய மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் திடீரென உயர்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருமண உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும், தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது கல்வி உதவித்தொகையென மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ.3 ஆயிரம் வரை தான் வழங்கப்படும். திருமண உதவித்திட்டம் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதத்திலும், ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு உதவியாகவும் இருந்தது. எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்தது சரியல்ல” என்று கூறினார்.

பிம்லா சந்திரசேகரன்
பிம்லா சந்திரசேகரன்

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் பிம்லா சந்திரசேகரனிடம் கேட்டபோது, “பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு அறிவித்த இந்த திட்டத்தை வரவேற்கிறேன். அதே நேரம் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

அரசின் திட்ட மாற்றத்தைக் கண்டித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்று தமிழகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in