பிடிஆர் இலாகா மாற்றம்: உற்சாகத்தில் பாஜக!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்பிடிஆர் இலாகா மாற்றம்: உற்சாகத்தில் பாஜக!

தமிழக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றம் செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆடியோ விவகாரத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி துறை மாற்றத்தை அண்ணாமலை ஏற்படுத்திவிட்டார் என பாஜகவினர் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்போது நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதில் முதல்வர் மருமகன் சபரீசன் மற்றும் மகனும் அமைச்சருமான உதயநிதி உள்ளிட்டோரை அந்த ஆடியோவில் குற்றம்சாட்டி இருந்ததாகத் தெரிகிறது.

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்றார். மேலும் ஆடியோ விவகாரம் தொடர்பாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அது தனது குரல் இல்லை ஒட்டியும், கட்டியும் அரசியல் செய்கிறார்கள் என கூறி பல உதாரண ஆடியோ, வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி என சமூக வலைதளங்களில் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் நிதி மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க தவறி விட்டார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லையெனில், 30,000 கோடி விவகாரம் உண்மை தான் என்று மக்கள் உறுதியாக நம்புவார்கள். தகுதியில்லாத ஒரு நபரை நிதியமைச்சராக நியமித்ததற்கு முதல்வர் வருத்தம் தெரிவிப்பாரா? அல்லது தகுதியுள்ள ஒரு நபரின் வாக்குமூலத்தை தவறென்று சொல்வாரா?’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in