மார்ச் 15ல் அதிமுகவில் மாற்றம் வரும்: முன்னாள் அமைச்சர் ஆரூடம்

மார்ச் 15ல் அதிமுகவில் மாற்றம் வரும்: முன்னாள் அமைச்சர் ஆரூடம்

"வருகின்ற 15ம் தேதிக்குள் அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நிகழ உள்ளது. அதற்குள் சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்ள வாருங்கள்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆரூடம் கூறியுள்ளார்.

நாடளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக கடும் சரிவைக் கண்டு வருகிறது. இதனால் இரட்டை தலைமை வேண்டாம், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்று வழி நடத்தினால் மட்டுமே சரிவை கண்டுள்ள அதிமுகவை மீட்க முடியும் என அதிமுகவில் உள்ள சில நிர்வாகிகள் குரல் எழுப்பியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை தன் வசம் வைத்திருந்த அதிமுக தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமே காரணம் என அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளான திண்டிவனத்தைச் சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சேகர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் முகமது ஷெரிப், தம்பி ஏழுமலை, உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி செஞ்சி ஏழுமலையின் மகனும், விழுப்புரம் மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளருமான யோகேஸ்வரன், செஞ்சியில் நடைப்பெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பேசுகையில், "சி.வி.சண்முகத்தின் மேல் மக்களுக்கு மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை. இவ்வளவு ஏன் கட்சிக்காரர்களுக்கு அவர் மேல் நம்பிக்கையே இல்லை. எனவேதான் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகத்தை மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் 48 பேர் கையெழுத்திட்டு தலைமைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர் தோல்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தான் காரணம். அவர் பீஸ் போன பல்பாகிவிட்டார். பீஸ் போன பல்பை வைத்து கொண்டு இதற்கு பிறகும் வெளிச்சம் வரும் என எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. எனவே பீஸ் போன பல்பை மாற்றி வேறு ஒருவரை நியமிக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில் திண்டிவனத்தில் இன்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பேசும்போது, "அதிமுகவில் ஜெ, ஜா அணி பிரிந்தது. அப்போது, நான் ஜெயலலிதா அணியில் இருந்தபோது கிண்டல் செய்தவர்கள் பின்னர் அமைச்சரானபோது வாழ்த்து தெரிவித்தார்கள். அதேபோல தற்போது சசிகலா தலைமையை ஏற்றுள்ளேன். வருகின்ற 15ம் தேதிக்குள் அதிமுகவில் முக்கிய மாற்றங்கள் நிகழ உள்ளது. அதற்குள் சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்ள வாருங்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in