‘அரசியல் உள்நோக்கத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள்...’ -உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தனக்கு எதிரான திறன் மேம்பாட்டு ஊழல் வழக்குக்கு எதிராக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீடு செய்திருக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பல கோடி ரூபாய் திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தனக்கு எதிராக பதிவான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவரது வழக்கறிஞர் குண்டூர் பிரமோத் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ’சந்திரபாபு நாயுடு மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கமுடையவை என்றும், மாநிலத்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சியை நிலைகுலையச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

21 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் திடீரென சந்திரபாபு நாயுடு பெயர் சேர்க்கப்பட்டதும், சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக அவரது சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சியே கைது நடவடிக்கை என்றும் அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லாதபோது, அவரது அடிப்படை உரிமைகளை தெளிவாக மீறும் வகையில் சட்டவிரோதமான வழக்கு மற்றும் நெருக்கடிகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் முறையிடப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை காவலில் வைக்க ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஆந்திய உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்த இரண்டுக்கும் எதிராகவே தற்போது சந்திரபாபு நாயுடு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in