பரபரப்பு... சிறையில் சந்திரபாபு நாயுடு; வெளியே மனைவி, மகன் உண்ணாவிரதப் போராட்டம்!

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சிறையிலும், வெளியே அவரது மனைவி, மகன் மற்றும் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி காவல்துறையினர் கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும், ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே, சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. மேலும், அவரது மனைவி, மகன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் கே.அச்சன்நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "75 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிடியில் இருந்து இந்தியாவிற்கு விடுதலையை பெற்று கொடுத்துவிட்டார்.

தேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய ஜனநாயக கட்டமைப்பில் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையிலும், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அமைதியான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும் நடந்து கொள்கிறது. எனவே, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in