ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் கைது, தேசியளவில் அரசியல் கவனம் பெற்றிருக்கிறது. கலவையான எதிர்வினைகளுக்கு மத்தியில், ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரான ரோஜா பட்டாசு வெடித்து, இனிப்புகள் பகிர்ந்து சந்திரபாபு நாயுடு கைதை உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்.
அரசியல் நாகரிகமற்ற செயல் என விமர்சனத்துக்கு ஆளானபோதும், ரோஜாவின் உற்சாகத்தில் பழுதில்லை. சுமார் 15 ஆண்டுகளாக குமுறிக் கொண்டிருந்த அவரது மனம் இப்போதுதான் ஆசுவாசம் கண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவை நம்பி அரசியலில் குதித்த ரோஜா, இன்றைக்கு அவரது கைதுக்கு ‘ஸ்வீட் எடு, கொண்டாடு’ என்ற நிலைக்கு பயணித்திருப்பது அரசியல் விசித்திரங்களில் ஒன்று!
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு என இரு அரசியல் சிங்கங்களின் தற்போதைய மோதலை, வேடிக்கை பார்த்து வருகிறது பாஜக. வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் பாஜகவும், உள்ளிருந்து கொண்டாடி வரும் ரோஜாவும் எடுக்கத்தலைப்படும் முடிவுகளே ஆந்திராவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்க இருக்கின்றன.
சந்திரபாபு நாயுடு - அழுகை போய் ஆவேசம்
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின் முதல்வர் வேட்பாளருமான சந்திரபாபு நாயுடு, அதிரடியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையிலான ஆந்திராவின் 2014-2019 ஆட்சிக் காலத்தில், இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி என்ற பெயரில் ரூ.371 கோடி ஊழல் செய்ததான குற்றச்சாட்டில் மாநில குற்றப்புலனாய்வு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
2024 மக்களவை தேர்தலை ஒட்டியே ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் வருவதால், அவற்றை முன்னிட்டு மினி தேர்தல் அறிக்கை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சூறாவளி பிரச்சாரம் என கடந்த சில வாரங்களாக அதிரடி காட்டி வந்தார் சந்திரபாபு நாயுடு. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவின் இந்த வேகத்தை ரசிக்கவில்லை. இரு வருடங்களுக்கு முன்னர், தனது மனைவியைப் பற்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் தவறாகப் பேசுகிறார்கள் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதறி அழுதவர் சந்திரபாபு நாயுடு.
அந்த அழுகாச்சி நாடகத்தை பார்த்தவர்கள் இனி அவரது அரசியல் திடம் அவ்வளவுதான் என உச்சுக்கொட்டினார்கள். ஆனால் அவர்களின் கணிப்பை பொய்யாக்கி, திடீரென ஆவேச அரசியல் ரூபம் எடுத்தார் சந்திரபாபு நாயுடு. சிஐடி போலீஸார் கைது அரங்கேறும் போதும் அவரது ஆவேசம் அடங்கியபாடில்லை. சிறை செல்லும் முன் அவர் ”45 ஆண்டுகளாக ஆந்திர மக்களுக்காக உழைத்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டு உண்மையென அவர்கள் நிரூபிக்கட்டும்; நானே தூக்கில் தொங்குகிறேன்” என்று முழங்கியது, தெலுங்கு தேசம் கட்சியனரை வீறுகொண்டு எழச் செய்திருக்கிறது.
ஜெகன்மோகன் ரெட்டி; மதில் மேல் புலி
காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத இடத்தில் வீற்றிருந்த தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவை அடுத்து, அவரது இடத்துக்கு அரசியலில் முன்னேற முயன்றார் மகன் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போட்டதோடு சிபிஐ விசாரணை பேரில், ஜெகனை சிறையில் அடைத்தும் அழகு பார்த்தது காங்கிரஸ். பொறுத்தது போதுமென ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை கட்டியெழுப்பி, 8 வருட அரசியல் போராட்டத்துக்குப் பின்னர் ஆட்சியை பிடித்து முதல்வரானவர் ஜெகன்மோகன் ரெட்டி.
என்டிஆர் காலம் தொட்டு தெலுங்கு தேசம் - காங்கிரஸ் என இருதுருவ அரசியல் மையங்கொண்டிருந்த ஆந்திராவை, ஜெகன் புரட்டிப் போட்டிருக்கிறார். கூடவே சந்திரபாபு நாயுடுவை மீண்டும் தலையெடுக்க விடாது அதிரடி அரசியலையும் தொடர்ந்து வருகிறார். மாநிலத்தில் மக்கள் அபிமானத்தை இழக்காததோடு, மத்தியிலும் நாயுடுகாருவுக்கு எதிராகவே அரசியல் சதுரங்கத்தை நடத்தி வருகிறார். இதனால் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத விநோதமாக, ஆந்திராவின் ஆளும் கட்சி - எதிர்க்கட்சி இரண்டுமே பாஜக ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றன.
ஜெகன் - சந்திரபாபு இருவருமே பாஜகவுக்கு எதிரான ’இந்தியா கூட்டணி’யை புறக்கணித்திருக்கிறார்கள். சந்திரபாபு முந்திக்கொண்டு அமித்ஷாவை சந்தித்த போதும், ஜெகன் பாஜகவை எதிர்க்கவில்லை; அதற்காக சரணடையவும் இல்லை. மக்களவை மசோதாக்கள் நிறைவேற்றலுக்கு ஜெகன் ஆதரவு பாஜகவுக்கு அவசியம் என்பதால் மதில் மேல் புலியாக உறுமும் ஜெகன்மோகன் ரெட்டியைக் கவலையுடன் கவனித்து வருகிறது பாஜக.
பாஜக; பலிக்குமா பம்மாத்து?
ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் - சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் என்ற ஆந்திர அரசியல் ஆடுகளத்தில், காங்கிரஸ் மூன்றாம் இடம் வகிப்பதால், பாஜக நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆனபோதும் அதைப் பற்றி கவலைப்படாது, தென்னிந்தியாவில் பாஜகவை வளர்த்தே தீர்வது என தனது வழக்கமான வியூகங்களைக் கையில் எடுத்திருக்கிறது.
அதன்படி முன்னணியில் இருக்கும் ஜெகன் - சந்திரபாபு என முதலிரு இடங்களை குறிவைத்து வியூகம் வரைந்திருக்கிறது. இருவரில் ஒருவரை சாய்த்தால் எளிதில் பாஜக இரண்டாம் இடத்துக்கு முன்னேறிவிடும். முன்னதாக அமைச்சரவையில் இடம் கிடைக்காது அதிருப்தியில் இருந்த ரோஜாவுக்கு பாஜக தூது விட்டுப் பார்த்தது. ஜெகன் சுதாரித்து ரோஜாவை சமாதானப்படுத்தியதில், என்டிஆர் மகள் புரந்தேஸ்வரி வசம் பாஜக மாநிலப் பொறுப்பை கையளித்தது. அடுத்தபடியாக, ஜெகன் - சந்திரபாபு இருவரில் ஒருவர் வீழ காத்திருக்கிறது.
சந்திரபாபு நாயுடு ஆரம்பத்தில் பாஜக கூட்டணியில் இருந்தவர்தான். ஆனால் தெலங்கானாவின் சந்திரசேகர் ராவ் போன்று, மோடியை முழுமூச்சாக எதிர்த்ததில் அடி சறுக்கினார். அதிலும் தன்னை மோடிக்கும் சீனியராக வரிந்துகொண்டு, அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களையும் முன்வைத்தார். காலம் மாறியதில் தற்போது பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாடை எடுத்த பின்னரும், மோடியை சந்திக்க வழியின்றி அமித்ஷாவோடு சந்திரபாபுக்கு கதவடைத்து விடுகிறார்கள்.
ஜெகன் - சந்திரபாபு என இருவரையும் ஒரே தராசில் வைத்திருக்கும் பாஜக, எவரை எதிர்ப்பது எவரை ஆதரிப்பது என வெளிப்படையாக அறிவிக்காது இருக்கிறது. தற்போதைய சந்திரபாபு கைது விவகாரத்தில் மவுனம் சாதிப்பதன் மூலம், ஜெகனுக்கு சமிக்ஞை தந்திருக்கிறது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து விசாரணை, சிறை தண்டனை என சந்திரபாபு அரசியல் கதை முடிவுக்கு வந்தால், இரண்டாம் இடத்துக்கு எளிதில் முன்னேறலாம் என பாஜக கணக்குப் போட்டிருக்கிறது.
மாறாக, ஆவேச போர்க்கோலம் பூண்டிருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது தொண்டர்கள், பாஜகவின் கணக்கை பொய்யாக்கவும் கூடும். சந்திரபாபு எழுச்சி மீண்டும் ஆந்திராவில் சாத்தியமானால், கூச்சமே இன்றி ஜெகனை கைகழுவி சந்திரபாபுவை ஆரத் தழுவவும் பாஜக தயாராக இருக்கிறது. சட்டப்பேரவை மட்டுமன்றி மக்களவைத் தேர்தல் நெருக்கடிகள் பாஜகவை இந்த முடிவுக்கு நெட்டித் தள்ளும்.
ரோஜா; அடுத்தது அம்மணியின் ராஜாங்கம்?
அரசியல் குறித்தெல்லாம் பெரிதாய் அபிப்பிராயம் இல்லாது வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஆந்திராவில் பிறந்து, தமிழில் நடித்து, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை மணந்ததில் தமிழ்நாட்டின் மருமகளாகவும் மாறிப்போனார். பட வாய்ப்புகள் தரைதட்டியதில், தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் பிரச்சார குழுவில் ஒருவராய் ஒப்பந்தமானபோது, மக்களின் வரவேற்பைக் கண்டு, நெகிழ்ந்து இனி எதிர்காலம் ஆந்திர அரசியல்தான் என முடிவெடுத்தார். ஆந்திரா அதுவரை பார்க்காத பெண் அரசியல்வாதியை அதன் பின்னர் எதிர்கொண்டது.
அக்கட மக்களின் அபிமானத்தை வென்று தெலுங்கு தேசம் கட்சியில் படிப்படியாக வென்ற ரோஜாவுக்கு சந்திரபாபு குடும்பத்தினர் எதிராக மாறிப்போனார்கள். சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் வளர்ச்சிக்கு ரோஜா, முள்பாதையாக இருப்பார் என்று பயந்தார்கள். சந்திரபாபு நாயுடுவை தனது அரசியல் குருவாக வரிந்துகொண்டு, முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு கட்சியில் களமாடி வந்த ரோஜாவின் முதுகில் குத்தினார்கள்.
ஜெயிக்க வாய்ப்பில்லாத சந்திரகிரி தொகுதியில் சீட் தந்து வெறுப்பேற்றினார்கள். லோகேஷ் ஆதரவாளர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் சீண்டினார்கள். சந்திரபாபு நாயுடுவை சந்தித்து முறையிட முயன்றால் அவரும் நேரம் ஒதுக்காது அலட்சியப்படுத்தினார். ரோஜா துடித்துப்போனார். சந்திரபாபு நாயுடுவை எந்தளவுக்கு உயரத்தில் வைத்து தொழுதாரே அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டார்.
ரோஜாவின் எதிர்ப்பை சந்திரபாபு குடும்பத்தினர் அலட்சியம் செய்தார்கள். அரசியலில் நிர்க்கதியாக தவித்தவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி அபயம் தந்தார். ரோஜா விரும்பிய நகரி தொகுதியை தந்து எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தார். விசுவாசத்துக்கு பெயர் போன ரோஜா இம்முறை ஜெகனை தொழுதார். சந்திரபாபு நாயுடுக்கு எதிராக சட்டப்பேரவையில் இறங்கி அடித்தார். ”அரசியல் களத்திலிருந்தே சந்திரபாபு நாயுடுவை அப்புறப்படுத்துகிறேன்” என அப்போது கர்ஜித்தார்.
அரசியல் அனுபவமற்ற பெண்ணின் பிதற்றல் என்று அப்போது எல்லோரும் சிரித்தார்கள். இப்போது சந்திரபாபு நாயுடு கைதை பட்டாசு வெடித்து, இனிப்புகள் பரிமாறும் ரோஜாவை வாய்பிளந்து அதிசயிக்கிறார்கள். தனது சபதத்தில் பாதி கிணறு தாண்டியிருக்கிறார் ரோஜா. ஆனால் கட்சியிலும், ஆட்சியிலும் ரோஜாவின் வேகம் பார்த்து ஜெகன் மோகனின் ஆதரவாளர்கள் துணுக்குற்று வருகிறார்கள். ஜெயலலிதாவை முன்மாதிரியாக கொண்டு, அவரிடம் ஆசிபெற்று தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கிய ரோஜா, எக்கணத்திலும் ஜெகனை சரித்துவிட்டு வளர்ந்து நிற்பார் என்ற உதறல் ஜெகன் மோகன் தரப்பினருக்கு இருக்கவே செய்கிறது.
இப்படி ரோஜாவின் மலர்ச்சியை தெலுங்கு தேசம் கட்சியினர் மட்டுமன்றி, ஜெகனுக்கு நெருக்கமான ஒய்எஸ்ஆர் கட்சியினரும் கவலையோடு கவனித்து வருகின்றனர். ரோஜாவுக்கு இன்னொரு சந்திரபாபு நாயுடுவாக ஜெகன் மோகன் மாறும் காலம் தொலைவில் இல்லை. அப்போது ரோஜா தனது ஆதரவாளர்களுடன் புதிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடும். அப்போது அவரை அரவணைக்க பாஜக முன்வர நேரிடலாம். ரோஜா தனது அபிமானத்துக்குரிய ஜெயலலிதா பாணியில் துடிப்புடன் ஆந்திர அரசியலில் தனியாவர்த்தனம் செய்ய முன்வருவார்.
இவையெல்லாம் ஆந்திர மிளகாய்க்கு இணையாக அந்த மாநிலத்தின் ஊடகங்கள் கிளப்பும் காரமான ஆருடங்கள். ரோஜாவின் அரசியல் ராஜாங்கத்தில் அவர் எதிர்பார்க்காது பலவும் அரங்கேறி இருக்கும் போதும், இந்த ஆருடங்களிலும் குறை நேராது என்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்ததற்காக தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வறுத்தெடுத்த ரோஜா, சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், கட்சியின் நட்சத்திர எம்எல்ஏவுமான ஆந்திர சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவையும் விரைவில் சதாய்க்கவிருக்கிறார்.
எதிர்ப்புகளில் புடம் போட்டு வளர்ந்த ரோஜாவுக்கு, இதர ராஜ பாதைகளிலும் பயணிப்பது சாத்தியமாகக் கூடும்!