டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிரடி

மத்திய அமைச்சர் அனுராக் தாகுர்
மத்திய அமைச்சர் அனுராக் தாகுர்

டிஜிட்டல் மீடியாவை ஒழுங்குபடுத்தும் மசோதாவை மத்திய அரசு உருவாக்கி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் இந்தி செய்தி நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “முன்னர் செய்திகளின் ஒருவழித் தொடர்பு இருந்தது, ஆனால் மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சியினால் செய்திகளின் தொடர்பு பல பரிமாணங்களாக மாறிவிட்டது. இப்போது ஒரு கிராமத்தின் சிறிய செய்திகள் கூட டிஜிட்டல் மீடியா மூலம் தேசிய தளத்தை சென்றடைகின்றன” என்று கூறினார்.

மேலும், “ அரசாங்கம் பெரும்பாலான அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை சுய ஒழுங்குமுறைக்கு விட்டுவிட்டோம். டிஜிட்டல் மீடியா வாய்ப்புகளையும், சவால்களையும் முன்வைக்கிறது. நல்ல சமநிலையைப் பெற, இதில் என்ன செய்ய முடியும் என்பதை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். எனவே டிஜிட்டல் மீடியா தொடர்பாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

செய்தித்தாள்களை பதிவு செய்யும் செயல்முறையும் எளிமையாக்கப்படும். 1867-ம் ஆண்டின் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவரும். புதிய சட்டத்தின் கீழ், ஆன்லைன் முறையில் ஒரு வாரத்தில் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க முடியும். செய்தித்தாள்கள் சரியான செய்திகளை பொது மக்கள் முன் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். அரசின் குறைபாடுகளுடன், மக்கள் நலத்திட்டங்களும், அரசின் கொள்கைகளும் சாமானிய மக்களை சென்றடைய வேண்டும்.

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட்டு அச்சம் மற்றும் குழப்பம் என்ற சூழ்நிலையை உருவாக்குவதை தவிர்க்க வேண்டும்.

ஊடகவியலாளர்களின் நலன்களை மத்திய அரசு கவனித்துக்கொள்கிறது. கோவிட் பாதிப்பால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in