பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் இம்மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
மார்ச் 13்ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இதனையடுத்து பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "காங்கிரஸ் தலைமையின் முயற்சியால் 2010 மார்ச் 9ம் தேதி மாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதற்கு ஆதரவைப் பெற முடியவில்லை. மசோதா காலாவதியாகவில்லை. அது நிலுவையில் உள்ளது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க விடாமல் தடுத்தது எது?" என்று கேள்வி எழுப்பினார்
இந்த மசோதா குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா, “
"ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் நாங்கள் வெற்றி பெற்றோம். அது உயிருடன் உள்ளது, பாஜக அரசுக்கு தற்போது மக்களவையில் பெரும்பான்மை உள்ளது, அவர்கள் 2019 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர். ஒன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் இன்னும் அமைதியாக இருக்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், பாஜக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து, பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று அவர் கூறினார்.