`அதானிக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதால் மக்களை வதைக்கிறார் மோடி'- கொந்தளிக்கும் சீமான்

சீமான்
சீமான்

``மோடி தன் நண்பர் அதானிக்காக நாட்டு மக்களை வதைக்கிறார்'' என சங்கரன்கோவிலில் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சங்கரன்கோவிலில் இன்று காலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். “நாட்டு மக்களுக்கு இன்று மின்சாரம் தான் பிரதானம். மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை எனச் சொல்லும் காலம் இது. இப்படியொரு சூழலில் ஏன் மின் உற்பத்தியைத் தனியார் வசம் கொடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அப்படி தனியார்வசம் கொடுத்தால் எப்படி மின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பீர்கள் என்னும் கேள்வி எழுகிறது.

மத்திய அரசு கொடுக்கும் தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாகவே மின் கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்கிறார். மத்திய அரசு, அழுத்தம் தருவது ஏன் என சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏன் என்றால் மின்சாரத்தை அதானி தயாரிக்கிறார். அவர் மோடியின் நண்பர். அவருக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதால் மக்களை வதைக்கிறார்கள்.

அனைத்துமே தனியார் மயம் என்பது பேராபத்தை நோக்கி முடியும். அத்தியாவசியப் பொருள்கள் தயாரிப்புக் கூட அரசிடம் இல்லை. இந்த மோசமான பொருளாதாரக் கொள்கைதான் இலங்கையிலும் நடந்தது. அந்த சூழலுக்குள் நாம் செல்லும்முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in