மத்திய அரசின் கடன், ஆளுநரின் செயல்பாடு: உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் அளித்த அதிரடி பதில்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் கடன், ஆளுநரின் செயல்பாடு: உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் அளித்த அதிரடி பதில்

``பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம். இதுதான் பாஜகவால் இந்தியா அடைந்த வளர்ச்சி'' என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

உங்களுடைய 70-வது பிறந்தநாளில் தொண்டர்கள் தொண்டர்கள் அளித்த பரிசு மிகவும் மனம் கவர்ந்த பரிசு எது?

உங்களில் ஒருவனான என்னை தலைவராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததை விட பெரிய பரிசு இருக்க முடியுமா?

உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?

தோல் கொடுப்பான் தோழன் என்பதற்கு அடையாளம் அவர்கள்.

மாணவ- மாணவியரிடம் `நான் முதல்வன்' திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா?

நல்ல ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டு மார்ச் ஒன்று வரை தமிழ்நாட்டில் உள்ள 1300 கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் உள்ள 17 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்தத் திட்டமே அனைத்து மாணவர்களுக்குமானது தான். நகர்ப்புற மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு போகிற வாய்ப்பு அதிகம். கிராமப்புற மாணவர்களுக்கு தான் `நான் முதல்வன்' திட்டமானது அதிகம் தேவை. தமிழக இளைஞர்கள் அனைவரும் `நான் முதல்வன்' என்று சொல்ல வைக்கும் இந்த திட்டத்தை எனது தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறேன்.

ஆளுநர்கள் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவி மடுப்பார்களா என்ன நினைக்கிறீர்களா?

இதுவரை நடந்த செயல்பாடுகளை பார்த்தால் ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்று தோன்றுகிறது.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை வெளிப்படையாகவே மிரட்டுகிறது பாஜக என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். டெல்லி துணை முதலமைச்சர் கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறேன். விசாரணை ஆணையம் மூலமாக வெல்ல நினைக்கக் கூடாது.

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?

தேர்தல் வியூகங்கள் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பாஜக. திரிபுராவில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை மோட்சா கட்சி பிரித்து கொண்டதன் காரணமாக காங்கிரஸ்- இடதுசாரி அணிகள் தோல்வியை தழுவி பாஜகவை வெற்றி பெற வைத்து விட்டார்கள். நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி அமைக்காமல் போயிருந்தால் இந்த வெற்றி கிடைத்து இருக்காது. திரிபுரா, நாகாலாந்து வெற்றி பற்றி பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவதில்லை. அந்த மாநிலத்தின் மொத்த தொகுதிகள் 59. இந்த 59 தொகுதியிலும் போட்டியிட்ட பாஜக இரண்டே இரண்டு இடங்களில் தான் வந்தது.

பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியதன் மூலமாக ஆளுங்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது பாஜக. இந்த மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது போல காட்டிக் கொள்கிறார்கள். போலரிசேஷன், சோஷியல் இன்ஜினீயரிங், மீடியா மேனேஜ்மென்ட் இந்த சொற்களுக்கான பொருள்களை புரிந்து கொண்டாலே பாஜகவினுடைய தேர்தல் வெற்றிகளை புரிந்து கொள்ளலாம்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?

தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த காலத்திலும் பாதிப்பு இருந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலையைத் தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த ஊர்களிலும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் சில பொய்யான வீடியோவை தயாரித்து பொய்யை பரப்பி இருக்கிறார்கள். வட மாநிலங்களில் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் இதை செய்திருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் இணைய வேண்டியதன் அவசியத்தை நான் எடுத்துச் சொன்ன மறு நாளிலே இப்படிப்பட்ட ஒரு பொய் பரப்பப்பட்டதை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும். இந்த செய்தி கிடைத்தவுடன் உடனே எங்கேயாவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லை கூட ஏற்படவில்லை என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அவர்களிடமும் தெரிவித்து இருக்கிறேன். தமிழ்நாடு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளித்து இருக்கிறார். அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழு திருப்தியோடு போயிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று எல்லோரும் சொல்வார்கள். தமிழ்நாடு, தமிழர்களும் ஒற்றுமையும், சகோதரத்துவம் விரும்புகிறவர்கள். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இதை இங்கு இருக்கிற வடமாநில சகோதரர்களுக்கும் நல்லாவே தெரியும்.

சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது?

இந்தியாவை வளர்த்துள்ளோம் வளர்த்துள்ளோம் என்று பாஜக சொல்வது எது தெரியுமா? பாஜக ஆட்சிக்கு வரும்போது 2014-ம் ஆண்டில் ஒரு சிலிண்டரின் விலை 414 ரூபாய். இப்பொழுது சிலிண்டரின் விலை 1118 ரூபாய் 50 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 72 ரூபாய் 26 பைசா. இப்போது விலை 102 ரூபாய் 62 பைசா. ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 55 ரூபாய் 49 பைசா. இப்பொழுது ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 பைசா. பாஜக ஆட்சிக்கு வரும்போது ஒன்றிய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி ரூபாய். இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி ரூபாய். அதாவது மூன்று மடங்கு அதிகம். இதுதான் பாஜகவால் இந்தியா அடைந்த வளர்ச்சி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in