‘தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை’ - அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பரபரப்பு பேட்டி

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்hindu கோப்பு படம்

மாநிலங்களின் ஒப்புதலுடனே உணவுப்பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தற்போதைய அரசியல், நிதி சூழல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அந்த பேட்டியின் முழு வடிவம் இதோ...

ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் உணவுப்பொருள்கள் மீதான வரி உயர்வை ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளாரே?

அவர் கூறியது கால்வாசி உண்மை. ஜிஎஸ்டி உயர்வு, குறைப்பு அல்லது மாற்றம் குறித்து விவாதிக்க ஃபிட்மெண்ட் கமிட்டி உள்ளது, இந்த குழுவில் தமிழகத்தின் அதிகாரியும் உள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி உயர்வு குறித்து விவாசித்த போது தமிழக அதிகாரி இதனை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் எதிர்ப்பதாக சொல்லிவிட்டார். ஆனால் பெரும்பான்மையின் அடிப்படையில் ஃபிட்மெண்ட் கமிட்டியின் பரித்துரைகள் அடுத்த கட்டமாக வரி அளவு சீர்திருத்தக் குழுவுக்கு செல்கிறது. இந்த குழுவில் சில மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் இக்குழுவில் இடம்பெறவில்லை. இருந்தாலும் இந்த வரிவிதிப்பை எதிர்ப்பதாக தமிழ்நாடு சார்பில் நான் கடிதம் இக்குழுவுக்கு எழுதினேன். ஆனாலும் அந்த குழுவின் 56 பரிந்துரைகள் ஒரு அஜெண்டா வாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இது 56 பரிந்துரைகளும் ஒரே வாக்காக ‘ஆம், இல்லை’ என வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களும் இதனை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டது. எனவே இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்காமல் எதிர்ப்பே தெரிவிக்காமல் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டதைப் போல நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் கூறியது 10 சதவீதம்தான் உண்மை.

வேறு வழியே இல்லாமல் இதனை ஏற்றுக்கொண்டீர்கள் என்றாலும், ஜிஎஸ்டியில் உள்ள அடிப்படை சிக்கல்கள் என்ன?

ஜிஎஸ்டியின் நோக்கமே சில வகையில் தவறானது என்று விளக்கி சொன்னவர் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. ஜிஎஸ்டி நோக்கத்தில் எவ்வளவு தவறு இருந்ததோ, அதனை கட்டமைப்பதில் மற்றும் அவசரமாக உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்ததில் எண்ணற்ற தவறுகள் உள்ளன. அதையும் தாண்டி செயல்முறையில் இன்னும் அதிகமான தவறுகள் உள்ளன. ஜிஎஸ்டி என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு நல்ல அடையாளம் என சொல்கிறார்கள். ஆனால், ஜிஎஸ்டியின் அஜெண்டாவை அமைப்பது, நிவாராத்தொகையை நீடிப்பதா இல்லையா என முடிவு செய்வது அனைத்துமே மத்திய அரசுதான். எப்போதெல்லாம் கடினமாக முடிவு எடுக்கப்படுகிறதோ அதில் மட்டும் மாநிலங்களின் பெயரை சேர்த்துவிடுகிறார்கள். எப்போதெல்லாம் நன்மை வருகிறதோ அதில் அவர்களே முடிவெடுத்துக்கொள்கிறார்கள்.

ஏனென்றால் இந்த ஜிஎஸ்டி சிஸ்டமே தவறு. கவுன்சிலில் 75 சதவீதம் வாக்கு இருந்தால் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றலாம். இதில் மத்திய அரசுக்கு மட்டும் 33 சதவீதம், மாநிலங்களுக்கு தலா 2 முதல் 2.5 சதவீதம் வாக்கு இருக்கும். எனவே அவர்கள் கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்க்க குறைந்தது 12 மாநிலங்கள் ஒன்று சேரவேண்டும். இதில் 12 மாநிலங்களை திரட்டுவது கடினமாக உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் மத்திய அரசு மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் மாநிலங்கள் வரியை ஏற்றவே குரல் கொடுக்கிறார்கள். இந்த வரி உயர்வுக்கு எதிரான தீர்மானத்தை நம்மை போன்ற மாநிலங்கள் கொண்டுவந்தாலும் மத்திய அரசு அதனை தோற்கடித்துவிடும். அதனால் வேறு வழியே இல்லாமல் இதனை ஏற்றுக்கொண்டாகவேண்டும்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோது, தமிழ்நாடு அரசு அரசு குறைக்க முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?

பாஜக அரசு 2014 ல் ஆட்சிக்கு வந்தபோது 9 ரூபாய் 40 காசுகள் இருந்த பெட்ரோல் வரியை 32 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தினார்கள். அதேபோல டீசலுக்கு 3 ரூபாய் 80 பைசாவாக இருந்த வரியை 31 ரூபாய் 50 பைசாவுக்கு உயர்த்தினார்கள். இதுபோல மிக அதிகமாக வரியை நம் நாட்டில் உயர்த்தியதே கிடையாது. அப்போதெல்லாம் எந்த மாநிலமும் இதுபோல வரியை உயர்த்தவில்லை. தடாலடியாக 3 அல்லது 4 மடங்கு வரியை உயர்த்திவிட்டு இப்போது தேர்தலுக்காக கொஞ்சம் குறைத்துவிட்டு எங்களை குறைக்க சொன்னால் எங்களால் முடியாது. மத்திய அரசு சொல்லும்போதெல்லாம் மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றால் இது ஜனநாயகமா?

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

நாட்டிலேயே முதல் முறையாக 2021 ஆகஸ்டில் 3 ரூபாய் பெட்ரோல் விலையை நாங்கள்தான் குறைத்தோம். அதன்பின்னர் மத்திய அரசு வரியை குறைத்தபோது மாநிலத்துக்குமான வரி குறைந்த காரணத்தால் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு 1ரூபாய் 95 இழப்பு ஏற்பட்டது. இதனால் பெட்ரோலுக்கு மட்டும் இதுவரை 4 ரூபாய் 95 காசுகள் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல டீசலுக்கு மத்திய அரசு குறைத்தததால் 1.76பைசா வரியை இழந்துள்ளோம். எனவே பெட்ரோல், டீசல் வாக்குறுதியில் 90 சதவீதம் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை இருந்த அரசுகளில் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

நாடாளுமன்றத்தில் தமிழகத்தை குறிவைத்தே அதிகளவில் விவாதங்கள் நடத்தப்படுகிறதே?

இன்றைய பிரதமராக இருக்கும் மோடி, 13 ஆண்டுகள் குஜராத்தின் முதல்வராக இருந்தார். அப்போது மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது என்று அவர் சொன்ன கருத்துகளை நான் இங்கே பின்பற்றுகிறேன். ஆனால் இப்போது மாநில அரசுகளை துன்புறுத்தி, ஒரம்கட்டி எல்லாமே நாட்டிற்கு அரசர் போல இருந்து டெல்லியிலிருந்து எடுக்கும் முடிவுகளைத் திணிக்கப் பார்க்கிறார்கள். பள்ளிக்கல்வி மாநிலப்பட்டியலில் உள்ளது, ஆனால் அதில் தலையிடுகிறார்கள். விவசாயம் மாநிலப்பட்டியலில் உள்ளது, அதில் மூன்று சட்டங்களை கொண்டு வருகிறார்கள். அணைகள் சிறு துறைமுகங்கள் மாநிலப்பட்டியலில் உள்ளது, அதிலும் மத்திய அரசு தலையிடுகிறது. இவ்வாறு மாநில அரசுகளை அடிமைப்படுத்தி நாட்டில் ஒரே அரசாக தாங்கள் மட்டுமே இருப்பதுபோல மத்திய அரசு செயல்படுகிறது.

நமது வரியாக 1 ரூபாய் சென்றால் அது திரும்ப நமக்கு 35 பைசா கூட வருவதில்லை. எதோ ஒரு முதலாளி டெல்லியில் அமர்ந்துகொண்டு எல்லாவற்றையும் அவர்களே தீர்மானிப்பதைப் போலவும், நாம் அவர்களிடம் அடிமையாக கெஞ்சி நிற்கவேண்டும் எனவும் விரும்புகிறார்கள். நமது வருமானத்தை எப்படி குறைப்பது, அமுக்குவது, நிறுத்துவது என்று பார்க்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் கட்டுப்படுத்தப்பார்க்கும் மத்திய அரசால் ஒரு விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் ரிசல்ட் மத்திய அரசைவிட சிறப்பாக உள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 7 சதவீதம். ஆனால் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை கிட்டத்திட்ட 3.5 சதவீதம். இப்போது நாட்டில் இருக்கும் பணவீக்கம் தேசிய அளவில் 8 சதவீதம், ஆனால் தமிழகத்தின் பணவீக்கம் 5 சதவீதம். எனவே இதனை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடந்த ஆண்டைவிடவும் இந்த இந்த ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. எனவே தமிழகத்தின் வளர்ச்சியை அமுக்கவேண்டும் என்றே, இதுபோல தமிழ்நாட்டை குறி வைக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in