குட்நியூஸ்; பெண்களுக்கு மத்திய அரசின் தீபாவளி பரிசு: நாளை திட்டம் அறிமுகம்!

மத்திய அரசின் ஜல் தீபாவளி திட்டம்
மத்திய அரசின் ஜல் தீபாவளி திட்டம்

பெண்களிடையே குடிநீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகை முதல் ’ஜல் தீபாவளி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாக விளங்கும் தண்ணீர், இயற்கை வளம் என்பதைத் தாண்டி, தற்போது விலைமதிப்பற்ற பண்டகமாக மாறியிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளும் காலநிலை மாற்றம் காரணமாக ஏதாவது ஒரு தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

சுதந்திர இந்தியாவில் இன்றும் பல கிராமங்களில் அடிப்படை தேவையான தண்ணீர் கிடைக்காமல், பெண்கள் நீண்ட தூரம் பயணித்து தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் நிலை நீடித்து வருகிறது.

மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கம்
மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கம்

இந்நிலையில், பெண்களுக்கு தண்ணீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வருகிற தீபாவளி பண்டிகை முதல் ஜல் தீபாவளி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்படி, வரும் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பெண்களைக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட உள்ளனர். இவர்களுக்கு சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட உள்ளது.

குடிநீர்
குடிநீர்

இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கவனிக்க அம்ருத், தேசிய நகர்ப்புற வாழ்வாதார மிஷன் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் தூய்மையான, தரமான குடிநீர் பெறுவது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி நீர் மேலாண்மை, நீர் உள்கட்டமைப்பு அம்சங்களில் பெண்களும் பங்களிப்பும் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in