
மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்த 2% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர் என்றும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவரே அதிகம் சேருவது வருத்தம் அளிக்கிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.கணேசன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வியை அனைத்து தரப்பிற்கும் எடுத்து சென்று அனைவரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே திராவிட மாடலின் ஒரே இலக்கு. இந்த இலவச பயிற்சி மையம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி, வங்கி, மத்திய அரசின் தேர்வுகளும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த 2 % பேர் மட்டுமே மத்திய அரசின் தேர்வில் தேர்ச்சி பெறுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் சேருகிறார்கள. அதனை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.