மத்திய பட்ஜெட்!- தமிழக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அரசியல் கட்சித் தலைவர்கள்
அரசியல் கட்சித் தலைவர்கள்hindu கோப்பு படம்

மத்திய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர், நிதியமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட். நிதிநிலை அறிக்கையில் ந‌திநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு நன்றி. சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய நிதியமைச்சருக்கு வாழ்த்துகள். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும், குடைக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். நாட்டு மக்கள் தொகையில் மேல்தட்டில் உள்ள 10 சதவிதத்தினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவிதத்தை பெற்று வரும் நிலையில், அடித்தட்டில் உள்ள 50 சதவிதத்தினர் (அதாவது 65 கோடி மக்கள்) 8 சதவிதம் மட்டுமே பெறுவதை அண்மையில் சர்வதேச ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது. சமூக கொந்தளிப்பை உருவாக்கும் இந்த ஏற்றத் தாழ்வை சமப்படுத்துவதற்கான முயற்சியில் நிதிநிலை அறிக்கை ஈடுபடவில்லை. 142 பில்லியனர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறைகாட்டுகிறது. அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்துவிட்டது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பாஜக அரசு செய்த குளறுபடியால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. இவற்றை மீட்க கடனுதவி அறிவிப்பு மட்டும் பயன் தராது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஸ்டார்ட் அப் - தொழில்கள் முடங்கி நிற்கின்றன. அவைகளுக்கு மேலும் ஐந்தாண்டுகள் ஊக்குவிப்பு உதவி தேவை எனக் கோருவதை நிதிநிலை அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் பாகுபாடு காட்டிவரும் மத்திய அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. பெரும் நிறுவனங்களின் கூடுதல் வரி ஐந்து சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது. சமூக உற்பத்தியில் உருவாகும் சொத்துக்களை குவித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலையில்லாமலும் வருமானம் இழந்தும் கதறி அழுதுவரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், சிறு-குறு தொழிலுக்கு உதவி, விவசாயத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்டவை மகிழ்ச்சியளித்தாலும் LIC பங்கு விற்பனை, நீர்பாசனத்திட்டங்களில் தனியார்மயம், தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லாதது ஆகியவை கவலையளிக்கின்றன" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in