குற்றவாளிகளைக் கொண்டாடுவது நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது!

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் கொதிக்கும் ஜோதிமணி!
ஜோதிமணி
ஜோதிமணி

ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஆரம்பத்திலிருந்தே அவர் கூடவே பயணிக்கிறார் கரூர் காங்கிரஸ் எம்பி-யான ஜோதிமணி. இடையிடையே நாட்டு நடப்பு குறித்தும் அவ்வப்போது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசிவரும் ஜோதிமணி ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில், “கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு” என தங்களது கூட்டணி தோழனான திமுகவுக்கும் மறைமுக குட்டுவைத்திருக்கிறார். இது தொடர்பாக, மஹாராஷ்ட்ராவில் ராகுல் நடைபயணத்தில் உடன் நடந்து கொண்டிருந்த ஜோதிமணியிடம் உணவு இடைவேளையில் பேசினோம். இனி அவரது பேட்டி...

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் ஏன் இத்தனை காட்டம்?

நீதிமன்றத்தால், குற்றவாளிகள் இல்லை என்று சொல்லி அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. கருணை அடிப்படையில் தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்பதற்காக கருணை காட்டி உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியது. சட்டமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ அல்லது வேறு எந்த சட்ட அமைப்புகளோ அவர்கள் குற்றவாளி இல்லையென்று சொல்லவில்லை. அதனால் தான் அவர்களை ஊடகங்களும் மற்றவர்களும் கொண்டாடுவது மாபெரும் தவறு என்கிறேன். 

இரண்டாவது, ராஜீவ் காந்தி மரணத்தின்போது இன்னும் 12 பேர் வரையிலும் உயிரிழந்தார்கள்.  அனுசியா என்ற காவல் ஆய்வாளர் கிட்டத்தட்ட சாவின் விளிம்புக்கே சென்று மீண்டு வந்திருக்கிறார். அப்படி இந்தச் சம்பவத்தில் இறந்துபோனவர் களும் இருக்கிறார்கள்;  செத்துப் பிழைத்தவர்களும் இருக்கிறார்கள்.  

அருமைத் தலைவர் ராஜீவ் காந்தியை மட்டுமல்ல...  அந்த மனித வெடிகுண்டு தமிழ்நாட்டில் பலரது வாழ்வை சிதைத்துவிட்டது. அப்படிக் கொல்லப்பட்டவர்களும் பாதிப்புக்கு உள்ளானவர்களும் தமிழர்கள் தானே. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அவர்களின் உறவுகளுக்கு ஏற்பட்ட வலிகளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?  இதையெல்லாம் மறந்துவிட்டு கொலையாளிகளை நாம் கொண்டாடினால் பாதிக்கப்பட்டவர்களது மனம் என்ன பாடுபடும்?

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் கொண்டாடப் படுகிறார்கள் என்று நீங்கள் எதை வைத்துச் சொல்கிறீர்கள்? 

நீங்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பாருங்கள்... ஊடகங்கள், அவர்களை மிகப் பெரிய மனிதர்களாக நினைத்து பேட்டி எடுப்பதும்,  அவர்களை வாழ்த்தி வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடுவதுமாக அல்லோலகல்லோலப்படுகிறது. கொண்டாட்டம் என்று சொல்லாமல் இதை வேறு எப்படிச் சொல்வது?  இந்த ஆரவாரத்தை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் இதை விமர்சித்து வருகிறோம்.

ராஜீவ் காந்தி என்பவர் தனி மனிதர் அல்ல;  இந்தியப் பிரதமராக இருந்தவர். ராஜீவ் குடும்பத்துக்கும் இவர்களுக்கும் வாய்க்கால் வரப்புத் தகராறு ஏதும் இல்லை. அப்படிப்பட்ட மனிதரைக் கொலை செய்தவர்களை நாம் கொண்டாடுகிறோம் என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்...  ஒரு நாகரிக சமுதாயம் இப்படிச் செய்யலாமா?

நாம் குழந்தைகளை வளர்க்கும் போது என்ன சொல்லி வளர்க்கிறோம்?  குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும்,  சமூக ஒதுக்கப்படுதலுக்கு ஆளாவோம் என்றெல்லாம் சொல்லி வளர்க்கிறோம்.  அதையெல்லாம் கேட்டு வளரும் குழந்தை, இப்படி குற்றம் செய்த கொலையாளிகளைக் கொண்டாடுவதைப் பார்த்தால் என்ன நினைக்கும்? 

குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நியதி அவர்கள் மனதிலிருந்து மாறி,  குற்றவாளிகள் கொண்டாடப்படுவார்கள் என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடும் இதை விமர்சிக்கிறேன். எந்த நாகரிகத்தின் அடிப்படையில்,  எந்த மனித உரிமை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டார்களோ...  அதே நாகரிகத்தின் அடிப்படையில் அதே மனித உரிமை அடிப்படையில், குற்றம் செய்தவர்களை நாம் கொண்டாடுவது தவறு என்று நான் சொல்கிறேன். 

அவர்கள் கொலைசெய்தார்கள் என்று சொல்லப்பட்டபோதோ, அதற்காக  32 ஆண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்தபோதோ அவர்களை யாரும் கொண்டாடவில்லை. இவ்வளவு காலம் சிறையில் கழித்தவர்களை அனுதாபத்தின் பேரிலோ, அல்லது மனிதாபிமானத்தின் பேரிலோ சென்று பார்ப்பதும் வரவேற்பதும் தவறு என்கிறீர்களா? 

அது 32 ஆண்டு காலமானாலும் சரி, 50 ஆண்டுகாலம் ஆனாலும் சரி,  கொலைக் குற்றவாளிகள்  கொலைக் குற்றவாளிகள் தானே? இப்போது இவர்களை விடுதலை செய்திருக்கிற அதே நீதிமன்றங்கள் தானே அப்போது இவர்களை குற்றம் செய்தவர்கள் என்று தீர்ப்பளித்தது. மனித உரிமையின் அடிப்படையில் தானே இப்போது இவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்? 

செய்த தவறுக்காக அவர்கள் 32 ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார்கள். அப்படித் தண்டிக்கப்பட்டவர்களை இன்னமும் நாம் குற்றவாளிகளாகவே பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? 

அதுதான் முன்பே சொல்லி விட்டேனே...  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா? அவர்கள் குற்றம் செய்தவர்கள் தான். அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தவர்கள்  என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லையே.

அவர்கள் குற்றவாளிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி  நிரூபிக்கப்பட்டதா என்ற கேள்வியும் இருக்கிறதே? 

சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதோ இல்லையோ ஆனால், அவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்கள். அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அதை வைத்துத்தான் நாம் பேச முடியும். சிறப்பு விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மற்ற  விசாரணை அமைப்புகள் எல்லாவற்றிலும் அவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டார்கள். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்களோ அதே சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. எனவே, அவர்களை குற்றவாளிகள் இல்லை யாரும் வாதிட முடியாது. அது உண்மையாக இருந்திருந்தால் நீதிமன்றங்கள் அப்போதே அவர்களை விடுதலை செய்திருக்கும். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்னதான் செய்யவேண்டும் என்கிறீர்கள்? 

அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இனி, அவர்கள் போய் அவரவரது வேலைகளைக் கவனிக்க வேண்டியதுதான். அதை விட்டுவிட்டு, ஒரு செலிபிரட்டி போலவும்,  சுதந்திரப் போராட்ட தியாகிகள் போலவும் அவர்களைக் கொண்டாடுவது தவறு. 

நீண்டகாலம் சிறையில் துன்பப்பட்டு வந்திருக்கும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுகூட தவறு என்கிறீர்களா? 

என்ன துன்பத்தை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள்? கொலை செய்திருக்கிறார்கள். அவர்களால் பலபேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.  கணவனை இழந்த மனைவி, பிள்ளைகள் இழந்த தந்தைகள் இருக்கிறார்கள்.  அவர்களின் துயரத்திற்கு முன்னால் அந்தத் துயரத்தை ஏற்படுத்தியவர்களின் துன்பத்தைப் பெரிதாகப் பார்க்க முடியுமா? இத்தனை பேருக்கு துயரத்தை ஏற்படுத்தியவர்களை நாம் கொண்டாடுவதை பார்க்கும் போது அவர்களுடைய மனமெல்லாம் என்ன பாடுபடும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.  

அவர்கள் தமிழர்கள் என்பதால் கொண்டாடப்படுகிறார்கள் என்றால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழர்கள் தானே?  அவர்கள் தமிழர்களா என்பது பிரச்சினை இல்லை.  குற்றவாளிகளா இல்லையா என்பதுதான்  பிரச்சினை. கொடிய குற்றவாளிகள் எந்தச் சமூகமாக இருந்தாலும் கொடிய குற்றவாளிகள் தான். சமூகத்தில் குற்றவாளிகள் கொண்டாடப்படுவார்கள் என்றால் அதன் பிறகு சட்டத்துக்கு யார் பயப்படுவார்கள்?

இதை கண்டிக்காமல் அனுமதித்தால் நாளைக்கு, பாலியல் குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். என்னைக் கேட்டால், குற்றவாளிகளைக் கொண்டாடுவது ஒரு நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது. இது ஏதோ காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை கிடையாது.  ஒரு சமூகத்தின் பிரச்சினை. இந்த கொண்டாடப்படுதல் என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீடுகளை கேள்விக்குரியதாக்கி விடுகிறது. இதை நான் மட்டுமல்ல யாருமே ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த நியாயம் எல்லாம் அவர்களின் விடுதலையைக் கொண்டாடுகிறவர்களுக்குத் தெரியாதா? 

அவர்கள் திருந்தலாம்,  மறுவாழ்வு பெறலாம், நடந்த தவறுக்கு வருந்தலாம்.  அதெல்லாம் வேறு விஷயம். ஆனால், அவர்களைக் கொண்டாடக்கூடாது. அது நியாயமும் இல்லை; சரியானதும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்தவர்களையும் கொண்டாடுவோம் குற்றவாளிகளையும் கொண்டாடுவோம் என்றால், பிறகு சமூகத்தில் என்ன இருக்கிறது? குற்றவாளிகளைக் கொண்டாடுகிறவர்கள் இந்தக் கேள்வியில் இருக்கும் நியாயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in