மற்றொரு மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு: மம்தாவை துரத்தும் அரசியல் நெருக்கடி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் மற்றொரு அமைச்சரும் சிக்கலில் மாட்டியுள்ளார். நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அசன்சோல், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள ஏழு இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மோலோய் கட்டக் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட பல முக்கியத் தலைவர்கள் மத்திய அமைப்புகளின் ரேடாரில் இருக்கும் நேரத்தில் இன்றைய ரெய்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோல திரிணமூல் மூத்த தலைவர் அனுப்ரதா மோண்டல் கால்நடை கடத்தல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ட்வீட் செய்த மோலோய் கட்டக், "அமித் ஷாவின் கண்காணிப்பின் கீழ் நாட்டின் நிலைமை திகிலூட்டுவதாக உள்ளது” என தெரிவித்திருந்தார்.

நிலக்கரி ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. நிலக்கரி கடத்தல் வழக்கை நவம்பர் 2020ல் சிபிஐ பதிவு செய்தது. மேற்குவங்கத்தில் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரி, முறைகேடாக விற்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் வினய் மிஸ்ராவின் சகோதரர் விகாஸ் மற்றும் பங்குரா காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அசோக் மிஸ்ரா ஆகியோர் முதன்மை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றப்பத்திரிகையில் அபிஷேக் பானர்ஜியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in