பிஹாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: லாலுவுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு!

பிஹாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: லாலுவுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு!

பிஹார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ஆர்ஜேடி தலைவர்கள் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

திடீரென கடந்த ஆகஸ்ட் 9ம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆகஸ்ட் 10ம் தேதி மீண்டும் பிஹார் முதல்வரானார். இந்த கூட்டணிக்கு சட்டசபையில் 164 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. நிதிஷ்குமார் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பினை எதிர்கொள்கிறார்.

இந்த நிலையில், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 காலகட்டம் வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, வேலை வாய்ப்புகள் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களான எம்எல்சி சுனில் சிங் மற்றும் மூன்று எம்பிக்கள் அஷ்பக் கரீம், ஃபயாஸ் அகமது மற்றும் சுபோத் ராய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிஹார் முன்னாள் முதல்வரும், தேஜஸ்வி யாதவின் தாயாருமான ராப்ரி தேவி, " நிதிஷ் குமார் தலைமையில் புதிய அரசு அமைந்தது குறித்து அவர்கள் பயப்படுகிறார்கள். பாஜக தவிர அனைத்து கட்சிகளும் எங்களுடன் உள்ளன. எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. சிபிஐ ரெய்டுகள் நம்மை பயமுறுத்துவதற்காகத்தான். நாங்கள் பயப்பட மாட்டோம். இது முதல்முறையாக நடக்கவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பயத்தில் அவர்களுடன் சேருவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்று கூறினார்.

பிஹாரில் ஆட்சியை இழந்த கோபத்தில் பாஜக இருப்பதால், சிபிஐ மற்றும் பிற மத்திய அமைப்புகள் சோதனைக்கு தயாராகி வருவதாக ஆர்ஜேடி கட்சி நேற்றிரவே ட்வீட் செய்திருந்தது.

2004 மற்றும் 2009 க்கு இடையில் லாலு அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணிகளுக்கான ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்கு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் போலா யாதவை சிபிஐ ஜூன் மாதம் கைது செய்தது. விசாரணையின் போது போலா யாதவ் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆர்ஜேடி தரப்பில், “லாலு ஜி 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ சோதனை நடத்த வேண்டும் என்றால், அது என்ன மோசமான ஏஜென்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். லாலு குடும்பத்தினர் பணிந்து பயப்பட மாட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in