டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர்.

மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக துணை நிலை ஆளுநர் சக்சேனா மற்றும் சில அரசு அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் 15 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனையிட்டு வருகின்றனர். டெல்லி அரசின் முன்னாள் கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவின் டாமன் மற்றும் டையூ இல்லத்திலும் சோதனை நடக்கிறது.

சோதனையை அடுத்து மணீஷ் சிசோடியா பகிர்ந்த ட்விட்டில், "சிபிஐ எனது வீட்டில் சோதனை செய்கிறது. அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். எனக்கு எதிராக எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில் "டெல்லி மாடல் கல்வியைப் பாராட்டி, அதற்கு உழைத்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் புகைப்படம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாளான நியூயார்க் டைமிஸில் வெளிவந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கு நாங்கள் சிபிஐயை வரவேற்கிறோம்.

நாங்கள் இந்த ரெய்டுக்கு நன்றாக ஒத்துழைப்போம். எனினும், இந்த ரெய்டால் ஒன்றும் வெளிவரப்போவதில்லை. கடந்த காலங்களிலும் பல சோதனைகள் நடந்துள்ளன. எதுவும் வெளிவரவில்லை. அதேபோல், இப்போது மீண்டும் எதுவும் வெளியே வராது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in