ரெய்டுகள் மூலம் எதிர்கட்சிகளை பயமுறுத்த முடியாது: ராகுல்காந்தி ஆவேசப் பேச்சு

ராகுல் காந்தி உரையாற்றிய போது
ராகுல் காந்தி உரையாற்றிய போது படம்: ஜாக்சன் ஹெர்பி

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு கதரால் ஆன தேசியக்கொடியைக் கொடுத்து ராகுல் காந்தியின் பயணத்தை தொடங்கி வைத்தார். ராகுல் அங்கிருந்து 600 மீட்டர் தூரத்திற்கு நடந்து பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

காங்கிரஸ் கூட்டம்
காங்கிரஸ் கூட்டம் படம்: ஜாக்சன் ஹெர்பி

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், ”தமிழ் மண்ணோடு எனக்கு இருக்கும் உணர்வு நீங்கள் அறிவீர்கள். அதனால் ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போதும் உற்சாகத்துடன் வருவேன். கண்ணைக் கவரும் சமுத்திரத்தின் முன்பு, இயற்கை எழில் சூழ தேச ஒற்றுமை பயணத்தைத் தொடங்குவது மிகவும் மகிழ்ச்சி. நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சிக்கு தேசத்தை ஒற்றுமைப்படுத்தும் பயணம் ஏன் தேவை என்னும் கேள்வி எழலாம். ஆனால், நாட்டில் கொடிக்கணக்கான மக்கள் தேச ஒற்றுமைக்கான தேவை இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் தான் இந்த யாத்திரை.

சிலர் இந்த மூவர்ண் தேசியக்கொடியையும், சக்கரத்தையும் பார்த்துவிட்டு சாதாரண துணி என நினைக்கலாம். ஆனால் இது வெறுமனே சக்கரமும், துணியும், மூவர்ணமும் மட்டுமல்ல. அதையெல்லாம் விட மேலானது. இந்தக் கொடி நம் கைக்கு சாதாரணமாக வரவும் இல்லை. இது நன்கொடையாகவும் வரவில்லை. இது இந்திய மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வெல்லப்பட்ட கொடி. இது ஒரு நபரையோ, ஒரு சாதியையோ, ஒரு மதத்தையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இது ஒவ்வொரு இந்தியனின் அடையாளம். இது தேசத்துக்கும், அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையைப் பாதுகாக்கிறது.

ஆனால், இப்போது இந்தக்கொடி தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உட்படுகிறது. இந்தியாவையும், அதன் தத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ், பாஜகவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. ஆனால், சிலர் இந்தக்கொடி அவர்களது தனிப்பட்ட உரிமை என நினைக்கிறார்கள். தனிப்பட்ட உரிமையில் நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் மட்டுமே நிர்ணயிக்க முடியும் என நினைக்கிறார்கள். வருவாய் புலனாய்வு, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து எதிர்கட்சிகளை பயம்காட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்களை முழுதாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்தியர்கள் பயப்பட மாட்டார்கள். எத்தனை மணிநேரம் அழைத்து கேள்விகேட்டாலும் பயம் இல்லை. இந்தியாவில் எந்த எதிர்கட்சியையும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது.

பாஜக மதத்தின் மூலமும், மொ்ழியின் மூலமும் நாட்டை பிள்ளக்க நினைக்கிறது. ஆனால் இந்தியா எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கும். இந்தியா வரலாற்றில் எப்போதும் இல்லாத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வேலை இல்லாத திண்டாட்டம் நிலவுகிறது. பேரழிவை நோக்கி நாடு நகர்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக மீடியா நண்பர்கள் வாய்மூடி மெளனமாக இருக்கிறார்கள். நாட்டின் தொலைக்காட்சிகளில் காட்டும் செய்திகளில் ஒருநாளும் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு பற்றிப் பேசுவதில்லை. பிரதமரின் முகத்தை மட்டுமே காட்டுவார்கள். பாஜக அரசு திட்டமிட்டு விவசாயிகள், கூலித் தொழிலாளிகளை நசுக்கி வருகிறது.

சில குறிப்பிட்ட பணக்கார பெரும் தொழிலதிபர்கள் இந்த நாட்டின் பொருளாதார்த்தை தங்கள் கைகைகளில் வைத்திருக்கிறார்கள். துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சார தயாரிப்பு என எந்த ஒன்றும் சில தொழில்திபர்களின் கரங்களில் உள்ளது. அவர்கள் இல்லாமல் நம் பிரதமரால் அரசியல் ரீதியாக ஒருநாள் உயிர் வாழ முடியாது. அவர்கள் இந்நாட்டின் ஊடகங்களை கையில் வைத்த்க்கொண்டு 24 மணிநேரமும் பிரதமர் படம் ஊடகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதையே பிரதமர், பிரதமராக இருந்து பார்த்துக் கொள்கிறார்.

ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு, விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என அத்தனையும் சில பெரும் பணக்காரர்களுக்கானதுதான். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நோக்கம் தான் இந்த அரசாங்கத்திற்கும் இருக்கிறது.இந்தியாவை பிளங்கள். அவர்களை ஒருவருக்கொருவர் மோதவிடுங்கள். சப்தமில்லாமல் அவர்கள் பணங்களை எடுங்கள் என பிரிட்டிஷ் அரசு செய்த வேலையையே இந்த ஆட்சியும் செய்கிறது. இன்று சிறு, குறு நடுத்தரத் தொழில் முடக்கப்பட்டு செயல் இழந்து நிற்கிறது விவசாயிகள் உயிர் வாழவே போராடும் சூழல் உள்ளது. புது வேலைவாய்ப்பே உருவாக்காத சூழல் நிலவுகிறது. இளைஞர்கள் எந்த வேலைவாய்ப்பையும் பெற்று சம்பாதிக்க முடியாத அளவிற்கு விலைவாசியில் ஏற்றம் உள்ளது. வரலாற்றில் இல்லாத மோசமான காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தச் சூழலில்தான் இந்தியர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டது. அதுதான் இந்த நெடும்பயணத்தின் நோக்கம். இதன்மூலம் மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என நான் கேட்க முடியும். ஆர்எஸ்எஸ், பாஜக போல் மக்களின் குரல்வளையை நெரிக்க விரும்பவில்லை. அவர்களின் ஞானத்தைக் கேட்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் பயணத்திற்கு தேசியக் கொடியை கொடுத்து வாழ்த்துச் சொன்ன என் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. வரும் நாள்களில் நடைபயணம் தொடரும்போது உங்களில் அநேகரை சந்திப்பேன் நம்புகிறேன் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in