அமெரிக்காவில் பினராயி விஜயன்... கேரள முதல்வரின் இல்லத்திற்குள் நுழைந்த சிபிஐ!- பின்னணி என்ன?

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அரசு இல்லத்திற்குள் மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஐ அதிரடியாகச் சென்று ஆதாரங்கள் சேகரித்துள்ளன. இது என்ன வழக்கு... என்ன நடந்தது என்பது குறித்த முழுமையான விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது.

உம்மன் சாண்டி
உம்மன் சாண்டி

கேரள முதல்வர் இல்ல வளாகத்தில் சிபிஐ நுழைந்தாலும் இவ்வழக்கிற்கும் பினராயி விஜயனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கேரளத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் முதல்வராக இருந்தவர் உம்மன்சாண்டி. இவரது அரசியல் வாழ்க்கையிலேயே கரும்புள்ளி குத்திய விவகாரமாக சோலார் பேனல் மோசடி வழக்கு இருந்தது. இதில் சம்பந்தப்பட்ட சரிதா நாயர் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் அடுக்கியிருந்தார். அதில் பாலியல் குற்றங்களும் அடக்கம். பொதுவாகவே சிபிஐ ஒரு வழக்கை விசாரிக்கும் போது குற்ற நிகழ்விடத்திற்கு சம்பந்தப்பட்ட புகார் தாரரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, அதன் நம்பகத்தன்மையை சோதிப்பது வழக்கம்.

உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முதல்வர் இல்லமும் சம்பந்தப்பட்டிருந்ததால் முதல்வர் இல்லத்திற்குள் சி.பி.ஐ அதிகாரிகள் ஆதார சேகரிப்பிற்காக நுழைந்தனர். ஆய்வாளர் நிபுல் சங்கர் தலைமையில் இருகுழுக்கள் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

அனுமதி பெறப்பட்டதா?

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். அவரோ, அவரது குடும்பத்தினரோ வீட்டில் இல்லை. இதனாலேயே பொது நிர்வாகத்துறை சி.பி.ஐ சோதனைக்கான அனுமதியை வழங்கியுள்ளது. முதல்வர் இல்லாததால் இது அவர்களுக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் கேரள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சிபிஐ நுழைவது இதுவே முதல்முறை.

கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 19-ம் தேதி, முதல்வர் இல்லத்தில் வைத்து சோலார் பேனல் சம்பந்தமாக பேசியபோது, தான் பாலியல் சீண்டலுக்கும் ஆளானதாக சரிதா நாயர் கூறியிருந்தார். ஏற்கெனவே இதேவிவகாரத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் அறை எண் 33, 34 ஆகியவற்றில் சோதனை நடந்தது.

முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இப்போது பாஜகவில் இருக்கும் அப்துல்லாகுட்டி, ஹிபி, அடூர் பிரகாஷ் எம்.பி, அனில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் மீதும் இந்த பாலியல் தொடர்பான புகார் உள்ளது. முதலில் இந்த வழக்கை கேரள மாநில குற்றப்புலனாய்வுத்துறையே விசாரித்து வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இருந்தும் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் சிபிஐ என்னும் செய்தி பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in