பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை விசாரணைக்கு அழைத்தது சிபிஐ!

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கை விசாரணைக்கு அழைத்தது சிபிஐ: 300 கோடி ரூபாய் லஞ்ச விவகாரத்தில் அதிரடி

300 கோடி ரூபாய் லஞ்ச விவகாரத்தில் ஏப்ரல் 27 அல்லது 28 ம் தேதி சிபிஐ முன் ஆஜராகுமாறு வாய்மொழியாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர், புல்வாமா விவகாரத்தில் பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார்.

ஜம்மு காஷ்மீரில் 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக். இவர் ஆளுநராக இருந்தபோது கிரு நீர்மின் திட்டம் தொடர்பான 2,200 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க ரூ.300 கோடி லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன்வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ அவரை தற்போது விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “ இந்த வழக்கு தொடர்பான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புவதால், சிபிஐ என்னிடம் ஆஜராகும்படி கூறியுள்ளது. எனது வசதிக்கு ஏற்ப ஏப்ரல் 27 அல்லது 28ம் தேதி வருமாறு வாய்மொழியாகச் சொன்னார்கள்” என்று சத்ய பால் மாலிக் கூறினார்.

முன்னதாக, இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர் ராம் மாதவ் தனக்கு பணம் கொடுத்ததாக மாலிக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறிய ராம் மாதவ், சத்ய பால் மாலிக் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல, சமீபத்தில் பேட்டி ஒன்றில் சத்யபால் மாலிக், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதல் குறித்த அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரில் பயணிக்க அனுமதி கோரியதாகவும், ஆனால், உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் அவர்கள் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்தில் பயணித்ததாகவும், அதனை அடுத்தே அவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கானதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு, புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியம் குறித்து பேச வேண்டாம் என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் மாலிக் தெரிவித்திருந்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யபால் மாலிக்கின் கருத்து குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in