ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் வழக்கை விசாரிக்க களமிறங்கியது சிபிசிஐடி!

ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் வழக்கை விசாரிக்க களமிறங்கியது சிபிசிஐடி!

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் டி.எஸ்.பி தலைமையில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11-ம் தேதி வானகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், ஈ.பி.எஸ் ஆதரவாளரான ஆதிராஜாராம், ஓ.பி.எஸ் ஆதரவாளரான பாபு மற்றும் உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த 4 புகார்களின் அடிப்படையில் 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட இந்த 4 வழக்குகளையும் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டதை அடுத்து தற்போது டி.எஸ்.பி தலைமையில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா மற்றும் செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேர் விசாரணை குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணைக் குழு விரைவில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் உட்பட கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in